எண்ணெய்க் கப்பல் வெடித்து சிதறியது- ஊழியர்கள் இறந்திருக்கலாம் என அச்சம்

by Admin / 04-02-2022 11:00:30am
எண்ணெய்க் கப்பல் வெடித்து சிதறியது- ஊழியர்கள் இறந்திருக்கலாம் என அச்சம்

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள டெல்டா மாநிலத்தில் ஷேபா ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் திடீரென வெடித்துச் சிதறியது. 

இதனால் கப்பல் தீப்பிடித்து, கரும்புகை வெளியேறியது. கப்பலில் இருந்த ஊழியர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

விபத்து ஏற்பட்டபோது 10 ஊழியர்கள் கப்பலில் இருந்ததாக ஷேபா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

தீயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
 
இந்த விபத்தினால் ஏற்பட்ட சேதமதிப்பு உடனடியாகத் தெரியவில்லை. கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சி மற்றும் அதிலிருந்து கரும்புகை எழுந்ததை கரையில் இருந்த ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் பீதியுடன் பார்ப்பதுபோன்ற வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 

எண்ணெய் வளம் நிறைந்த நைஜர் டெல்டா பகுதியில் இந்த மிதக்கும் எண்ணெய் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்கும் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்த கப்பலில் 2 மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெயை சேமிக்கும் திறன் இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. 

 

Tags :

Share via