வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை

by Admin / 09-03-2022 02:17:41pm
 வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 14-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டன. 

தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பிடிக்க ரஷிய ராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
 
அவர்களுக்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதனால் அந்த நகரங்களை ரஷிய படையால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை.

இதையடுத்து கீவ், கார்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு ஏவுகணை மற்றும் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது.

ரஷிய படைகளின் முக்கிய இலக்காக தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவை உள்ளன. அந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று ரஷியா முனைப்புகாட்டி வருகிறது.

இதற்காக கீவ்வை நோக்கி ரஷியாவின் பெரும் படைகள் வடக்கு பகுதியில் இருந்து முன்னேறி வருகின்றன. சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷிய படை அணிவகுப்பு இருக்கும் செயற்கைகோள் படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அப்போது ரஷிய படைகள் கீவ் நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கீவ்வை நோக்கி ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதன்மூலம் விரைவில் தலைநகர் கீவ்வுக்குள் ரஷியாவின் பெரும்படை நுழைந்து கடுமையான தாக்குதல் நடத்தலாம் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வுக்கு மிக அருகில் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது கீவ்வின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு இடைவிடாமல் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.

ரஷிய படைகள் இடையூறு இல்லாமல் முன்னேறி செல்ல புறநகர் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ்வை ரஷிய படைகள் நெருங்கி இருப்பதால் அந்நகருக்குள் விரைவில் நுழைந்து தாக்குதலில் ஈடுபடலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே நள்ளிரவு முழுவதும் தலைநகர் கீவ், மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷிய விமானங்கள் தொடர்ந்து குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின.

அந்த நகரங்களில் வான்வெளி தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தலைநகர் கீவ்வில் ரஷியா விமான தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று உக்ரைன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பதுங்கு குழிகள் மற்றும் கட்டிடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விமான தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் கீவ் நகரில் சைரன் ஒலிக்கப்பட்டு வருகிறது.

வாசில்கிவ், ஜிடோமிர் ஆகிய நகரங்களிலும் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

கார்கிவ் நகரில் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்தபடி இருக்கிறது. அங்கு நுழைந்துள்ள ரஷிய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். மேலும் அந்நகருக்குள் குண்டுகளும் வீசப்பட்டு வருகிறது.

துறைமுக நகரமான மரியு போலில் போர் நிறுத்தத்தை ரஷியா தொடர்ந்து மீறி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. மக்கள் பாதுகாப்பாக செல்லும் பாதையில் ரஷியா குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாகவும் இதனால் மக்கள் சிக்கி தவிப்பதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நீகோ லென்கோ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, ‘மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்ற 30 பஸ்கள், 8 லாரிகள் தயாராக உள்ளன. ஆனால் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஷியா தான் தெரிவித்த உறுதிமொழியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.

 

Tags :

Share via