அமெரிக்கா தடை இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிர்மலா சீதாராமன்

by Admin / 09-03-2022 04:53:30pm
 அமெரிக்கா தடை இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிர்மலா சீதாராமன்

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க துறைமுகங்களில் இனி ரஷியாவின் எரிபொருட்கள் கிடைக்காது.

 ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை செய்யப்படுவதால் அமெரிக்காவிலும் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். என்றாலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க செய்வோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தடை நடவடிக்கை இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியது

உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் எரிபொருள் தேவையில் 85 சதவீத கச்சா எண்ணெயை நாம் இறக்குதி செய்து வருகிறோம்.

தற்போது சராசரி விலையை விட சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக உள்ளது. இதை சரி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வை சரிகட்ட ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அளவை மறு பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம்.

இதற்கிடையே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தஆலோசனை நடத்தி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி லிட்டருக்கு ரூ.15 வரை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் நிலவுகிறது.

என்றாலும் பெட்ரோல், டீசல் விலைகள் சராசரியாக ரூ.5 அல்லது ரூ.6 உயர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும் என்று மத்திய மந்திரி இன்று அறிவித்துள்ளார். எனவே அடுத்த வாரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
 

 

Tags :

Share via