மே-17 ஆதிசங்கரர் ஜெயந்தி!

by Editor / 24-07-2021 11:37:00am
மே-17 ஆதிசங்கரர் ஜெயந்தி!

மூன்று வயதிலேயே தந்தையை இழந்த அந்த சிறுவன் தாய் ஆரியாம்பாள் அரவணைப்பில் வளர்ந்தார். சிறு வயதிலேயே வேதங்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். தாய் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய போது, திருமணம் செய்ய மறுத்துத் துறவு கொள்ள விரும்பினார். தாயார் அதனை அனுமதிக்கவில்லை.


அச்சிறுவன் ஒருநாள் தன் தாயுடன் ஆற்றில் குளிக்கச் சென்றான். ஆற்றில் இருந்த முதலை அவனது கால்களைக் கவ்வி இழுத்தது. தாய், கூச்சலிட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.
சிறுவன் தன் தாயிடம், "அம்மா! என்னைத் துறவு கொள்ளத் தாங்கள் அனுமதித்தால், முதலை என்னை விட்டு விடும். மறுத்தால் என்னை விழுங்கி விடும்' என்றான் . அவனது தாய், "மகன் உயிர் பிழைக்க வேண்டும்' என்று நினைத்துத் துறவு கொள்ள அனுமதித்தார். முதலை சிறுவனின் கால்களை விட்டுவிட்டு ஆற்றுக்குள் சென்று விட்டது.


வாக்குப்படி துறவு மேற்கொண்ட சிறுவன் தாயின் மேல் கொண்ட அன்பால், அடிக்கடி அவரை வந்து சந்தித்துக் கொண்டிருந்தார். அந்த உறுதி மிக்க சிறுவன்தான் பிற்காலத்தில் அத்வைதத்தை நிறுவிய ஸ்ரீஆதிசங்கரராகும். இந்நிகழ்வுகள் நடந்த இடம் கேரள மாநிலம் "சசலம்' எனப்பட்ட "காலடி'.


சங்கரரின் தாய், தொலைவிலிருக்கும் பெரியாறு ஆற்றில் தினமும் குளித்து, அங்கு குடிகொண்டிருக்கும் கண்ணனை வழிபட்டு வருவார். வயது முதிர்வால் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது குறித்து சங்கரரிடம் சொல்லி வருந்தினார்.


சங்கரர், கண்ணனை வணங்கினார். "குழந்தாய் ! நீ காலடி எடுத்து வைக்கும் இடத்திற்குப் பெரியாறு ஓடி வரும்' எனக் குரல் ஒலித்தது. சங்கரரும் தனது காலடியை தாயார் வீட்டருகே வைக்க, பெரியாறு சங்கரரின் தாயிருக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தது.
அதுவரை "சசலம்' என்று அழைக்கப்பட்ட அந்தக் கிராமம், சங்கரரின் கால் பட்டதால் "காலடி' என்று பெயர் மாற்றமும், பெரியாற்றிலிருந்து பிரிந்து வந்த ஆறு "பூர்ணா ஆறு' என்றும் வழங்கத் துவங்கியது.


சங்கரர் தாய் வழிபடுவதற்காக அங்கு கண்ணனுக்கு ஒரு கோயிலைக் கட்டி, கண்ணன் சிலையை நிறுவினார். ஆதிசங்கரர் நிறுவிய இந்தக் கோயில் தற்போது "திருக்காலடியப்பன் கோயில்' என்று அழைக்கப்படுகிறது.
கனகதாரா வேள்வி: ஆதிசங்கரர் ஒரு வீட்டில் பிச்சைக்குச்சென்றார். அந்த ஏழைப் பெண்மணி வீட்டில் பிச்சைக்கென எதுவுமில்லாத நிலையில், அவள் பசிக்கும்போது வாயில் அடுக்கிக் கொள்ள வைத்திருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைப் பிச்சையிட்டார்.


சங்கரர் அந்த ஏழைப் பெண்மணியின் வறுமை நீங்க, லட்சுமி தேவியை வேண்டி, "கனகதாரா ஸ்தோத்திர'த்தைப் பாடினார். அந்த வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனி மழையாய்ப் பொழிந்தது.


கை காட்டிய காலடி: "த்வைதம்' என்றால் இரண்டுபட்டது. "அத்வைதம்' என்பது இரண்டற்ற நிலை. ஜீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான். இறைவன் எல்லா உயிரினங்களுக்குள்ளும் ஆத்மாவாக விளங்குகிறான் என்கிறது அத்வைதம். "நமக்குள் இறைவன் இருக்கிறார். இறைவன் வேறு, நாம் வேறு அல்ல' என்பதைப் பலரும் உணர முடியாமல் இருப்பதற்குக் காரணம் மாயை என்பதே காலடி சங்கரன் காட்டிய கை ஆகும்.


அத்வைத தத்துவத்தை ஆதிசங்கரர் தொகுத்து எழுதினார். அதே சமயம் இதை யாருக்கும் இவர் நேரடியாக உபதேசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிசங்கரருக்கு முன்பே அத்வைதம் இருந்தது என்றாலும் அதன் கொள்கைகளை எடுத்து நிறுவியவர் சங்கரர் .


32 வருடங்கள்தான் வாழ்ந்தவர் ஆதிசங்கரர். ஆதிசங்கரரின் பிறந்த ஊர் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. காலடியில் ஆதிசங்கரருக்கான ஆலயம் ஒன்று பெரியாறு நதிக்கரையில் சிருங்கேரி மடத்தால் நடத்தப்படுகிறது.
ஆதிசங்கரரின் அன்னை ஆர்யாம்பாளின் சமாதியும் இங்கு உள்ளது. சங்கரர் துறவியானபோது "நான் இறக்கும் தறுவாயில் நீ என்னிடத்துக்கு வந்து, எனக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்' என தாயார் உறுதிமொழி வாங்கியிருந்தார்.
அன்னை இறந்தபொழுது ஊர் மக்கள் "துறவியாக இருக்கும் ஒருவர் தன் அம்மாவுக்கு இறுதிக் காரியம் செய்யத் தகுதியற்றவர்' என்றனர். அமைதியுடன் இதைக் கவனித்த ஆதிசங்கரர் வீட்டின் பின்புறம் தன் அன்னைக்கு சிதையை அடுக்கினார். அக்னி தேவதையை அழைத்தார். சிதை தீப்பற்றியது.


மகனின் உதவியால் முக்தி நிலையை எய்துவது எவ்வளவு பெரிய பாக்கியம்! அது ஆர்யாம்பாளுக்குக் குறைவறக் கிடைத்தது. அன்னைக்கு அளித்த வாக்குறுதியைத் துறவியான போதிலும் நிறைவேற்றினார் ஆதிசங்கரர்.
தற்போது, காலடியில் எட்டு அடுக்கு கொண்ட ஆதிசங்கரர் கீர்த்தி ஸ்தம்ப மண்டபம் சுமார் 150 அடி உயரம் கொண்டதாக நிறுவப்பட்டுள்ளது. மகாபெரியவர் விருப்பத்தின் பேரில் உருவான நினைவுத் தூண் இது.


இதன் நுழைவுப் பகுதியில் இரண்டு யானை உருவங்கள் உள்ளன. ஆதிசங்கரர் பாதுகைகளின் பிரதிபலிப்பாக இரு வெள்ளிக் குமிழ்கள் இங்கு உள்ளன. படிகளில் ஏறிச்செல்லும்போது ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாக விரிகிறது. விநாயகர், ஆதிசங்கரர் ஆகியோரின் உருவச் சிலைகளையும் காண முடிகிறது.


எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரரின் ஜயந்தி மே 17-ஆம் தேதி வருகிறது. அந்நாளில் இம்மகானின் செயல்களை நினைவு கூர்ந்து வணங்குவோம்.

 

Tags :

Share via