3 கோடி செம்மரம் பறிமுதல் 7 பேர் கைது

by Staff / 11-05-2022 01:41:25pm
3 கோடி செம்மரம் பறிமுதல் 7 பேர் கைது

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பெங்களூர்-சென்னை நெடுஞ்சாலையில் எம்.சி.ஆர். கிராஸ் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அதில் பயணம் செய்த 2 பேரை கைது செய்தனர்.அதில் ஒருவர் போலீசாரால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான கோவிந்தராஜ சேட்டு என்பது தெரியவந்தது.

விசாரணையின் போது அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சிறிது நேரத்திற்கு பிறகு பின்னால் வந்த 2 மினி டிரக் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் செம்மரக்கட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து அந்த வாகனங்களில் இருந்த 5 பேரை கைது செய்தனர்.மொத்தம் 89 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் எடை 2,725 கிலோ எனவும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியாகும் என ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில் கைதான 7 பேரும் திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ சேட்டு (44), ஞானபிரகாசம் (50), பெருமாள் (44), கள்ளக்குறிச்சியை சேர்ந்த கரியராமன்(27), குலஞ்சன்(36), வெங்கடேஷ்(37) மற்றும் கோவிந்தராஜுலு (21) என தெரிய வந்தது.செம்மரக்கடத்தலில் இவர்களுடன் இணைந்து ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த கூட்டாளிகள் 4 பேரையும் ஆந்திராவைச் சேர்ந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via