5ஜி சேவையால் என்ன ஆகும் ?

by Editor / 04-06-2021 08:58:42pm
5ஜி சேவையால் என்ன ஆகும் ?

 

தொலைதொடர்பு சேவைகளில் 4ஜியை தொடர்ந்து 5ஜி சேவையை அடுத்த ஆண்டு உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தினால் வெளியேறும் கதிர்வீச்சின் வீரியம் பலமடங்கு அதிகம் என்றும், இதனால், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜுகி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், 5ஜி தொழில்நுட்பத்தினால் இன்றைக்கு இருப்பதை விட 100 மடங்கு அதி தீவிரமாக இவை பாதிக்கும் என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்யவே முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த

டெல்லி நீதிமன்றம் ரூ,20 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த நேரத்தில் 5ஜி குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

5ஜி என்பது அடுத்த தலைமுறை மொபைல் இணைய சேவை. தற்போது இருக்கும் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை விட கூடுதல் வேகத்தில் எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.ரேடியோ அலைவரிசையை பெரிய அளவில் பயன்படுத்துவதால், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சாதனங்களை மொபைல் இணையத்தில் இணைத்துப் பயன்படுத்த முடியும்.

இந்த அதிவேக இணையம் நடைமுறைக்கு வந்தால், நேரடியாக காணும் பொருள்களுக்கு வரைபடம், ஒலி உள்ளிட்டவற்றை முப்பரிணாமத்தில், நிகழும் நேரத்திலேயே இணைத்துக் காட்டும் .உண்மையான உருவம் போலவே காட்டும்.

இந்நிலையில் 5ஜி சேவை மக்களின் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் என்றும் டிராய் தெரிவித்துள்ளது.ஒரு நொடியில் ஒரு ஜிபி டேட்டா பதிவிறக்க வேகம், இடைநிற்றல் இல்லாமல் வீடியோ காணும் வசதி, துல்லியமான காட்சிகள், ஒலிகள் ஆகியவை 5ஜி சேவையின் சிறப்பம்சங்களாக கூறப்படுகிறது. 5ஜி சேவை அமெரிக்காவிலும் தென்கொரியாவிலும் அறிமுகமாகியுள்ளது. தற்போதைய நான்காம் தலைமுறை இணையத்தின் வேகம் சராசரியாக நொடிக்கு 42 மெகா பைட்-ஆக இருக்கிறது. ஆனால் தொலைத் தொடர்புத் துறையினரோ நொடிக்கு 1 ஜிகா பைட் வேகம் வரை தொடலாம் என்கிறார்கள்.

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை மூலம் தற்போது இருக்கும் இணைய வேகத்தை விட 10 முதல் 20 மடங்கு அதிக வேகத்தில் இணைய சேவையைப் பெறலாம். ஒரு ஹெச்.டி சினிமா படத்தைக் கூட ஒரு நிமிடத்துக்குள் நொடியில்  பதிவிறக்கம் செய்துவிடலாம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.மேலும்  இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளும் குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளன. இந்தியாவிலும் ஒரு சில ஆண்டுகளில் 5ஜி சேவை அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்கான அலைக்கற்றை ஏலத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் ‌5ஜி கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வோடஃபோன் ஐடியா தொடங்க உள்ளது. எது எப்படியோ புதிய கண்டுபிடிப்புக்களால் நன்மையையும், தீமையும் கலந்து இருப்பது இயற்கைதான் .

 

Tags :

Share via