ஆசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

by Editor / 25-08-2022 10:49:07pm
 ஆசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் தேசியஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் டெல்லியில் வழங்குவார்.அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. 

தமிழகத்திலிருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு  6 ஆசிரியர்களை பள்ளி கல்வித் துறையின் தேர்வுக்குழு பரிந்துரை செய்திருந்தது. ஆசிரியர்கள் ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, ராஜலட்சுமி ராமச்சந்திரன், முருகன், ஜெரால்ட் ஆரோக்கியராஜ், பிரதீப், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் ராமச்சந்திரன் மட்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் முதலியார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜாவும் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாடு முழுவதும் இருந்து மொத்தம் 46 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான நிலையில், இந்த ஆண்டில் ஒரே ஒருவர் மட்டுமே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்வான அனைவருக்கும் வரும் செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தேசிய நல்லாசிரியர் விருது

Share via