ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

by Staff / 23-09-2022 01:22:47pm
ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, கேரள போக்குவரத்து கழக ஓட்டுநர் இன்று ஹெல்மெட் அணிந்து பணிக்கு வந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.எர்ணாகுளம் மாவட்டத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தை ஓட்டி வரும் லத்தீப் பி.எஸ்., கல்வீச்சுகளில் இருந்து தலை மற்றும் கண்களை பாதுகாக்க ஹெல்மெட் அணிந்து பஸ்ஸை இயக்கினார்.

தனது கடந்த கால அனுபவமே ஹெல்மெட் அணியத் தூண்டியது என்கிறார் லத்தீப். பத்து ஆண்டுகளுக்கு முன், ஒரு முழு அடைப்பு நாளில், கோழிக்கோடு இருந்து தொடுபுழாவுக்கு வந்து கொண்டிருந்த போது, ​​கல்லால் தாக்கப்பட்டார். பேருந்தின் கண்ணாடி கல்லால் உடைந்து கண்ணாடித் துகள் கண்ணுக்குள் சென்றது. இதனால் கண்ணில் காயம் ஏற்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் அடிக்கடி கண் வலி மற்றும் கண்களில் நீர் வடியும் நிலை உள்ளது. இந்த முன் அனுபவத்தின் எதிரொலியாக முழு அடைப்பு போராட்டம் எப்போது அறிவிக்கப்பட்டாலும் ஹெல்மெட் அணிந்துதான் பணிக்கு செல்வேன் என முடிவு செய்துள்ளதாக லத்தீப் கூறுகிறார்.

முழு அடைப்பு போராட்ட நாள் அன்று இயக்கப்படும் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் இடத்தில் மட்டுமே பாதுகாப்பு உள்ளது என்கிறார் லத்தீப். இன்று காலை திருச்சூர் சென்றார்.

அவர் ஹெல்மெட் அணிந்திருப்பதை பார்த்ததும் பயணிகள் அனைவரும் அதை ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்து தெரிவித்ததாகவும் ஓட்டுநர் கூறினார். இன்றைய தினம் ​​பல அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். கோழிக்கோட்டில் ஓட்டுநரின் கண்ணில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via