வண்ணத்துப்பூச்சி திருவிழாவை கனிமொழி எம். பி. தொடங்கி வைத்தார்

by Staff / 30-11-2022 04:28:42pm
வண்ணத்துப்பூச்சி திருவிழாவை கனிமொழி எம். பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வண்ணத்துப்பூச்சி திருவிழாவை கனிமொழி எம். பி. தொடங்கி வைத்தார். வண்ணத்துப்பூச்சி திருவிழா தூத்துக்குடி மாவட்ட வனத்துறை மற்றும் மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வனக்காப்பு மையம் இணைந்து 'வண்ணத்துப்பூச்சி திருவிழா'வை வல்லநாடு கிள்ளிகுளம் வேளாண் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் நேற்று நடத்தியது. கனிமொழி எம். பி. தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்தார். வண்ணத்துப்பூச்சிகள் குறித்த புகைப்பட கண்காட்சியையும், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். இயற்கை வளங்கள் நிகழ்ச்சியில் கனிமொழி எம். பி. பேசியதாவது: - வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள காலநிலை மாற்றத்தால் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. மாசு தரும் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்து உள்ளது. நாம் சாப்பிடும் உணவிலும், சுவாசிக்கும் காற்றிலும் கூட பிளாஸ்டிக் கலந்துள்ளது. வீட்டு தோட்டங்களில் கூட மருந்துகளால் பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. இதனால் விவசாயம் செய்யும் நிலங்களில் வண்ணத்துப்பூச்சிகள் அழிந்து வருகின்றன. இதன் காரணமாக மகரந்த சேர்க்கை நடைபெறாமல் போகிறது. ஆகவே உலகை பாதுகாக்க வேண்டும். இதற்கு இளம் வாக்காளர்கள் உலகை பாதுகாக்காதவர்களுக்கு எப்போதும் ஓட்டுப்போட மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கனிமொழி எம். பி. யிடம் ஆர்வத்துடன் ஆட்டோகிராப் வாங்கினர். ஒரு மாணவி, கனிமொழி எம். பி. உருவத்தை படமாக வரைந்து அவரிடம் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம். எல். ஏ. , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாரு ஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், ஸ்ரீவைகுண்டம் வனசரக அலுவலர் பிருந்தா, வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திராமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via