கடையத்தில் பாரதி-செல்லம்மாவின் 124-ஆவது திருமண நாள் விழா

by Editor / 27-06-2021 08:11:46pm
கடையத்தில் பாரதி-செல்லம்மாவின் 124-ஆவது திருமண நாள் விழா

கடையத்தில் பாரதி-செல்லம்மாவின் 124-ஆவது திருமண நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பெரியாருக்கு முன்மாதிரியாக இருந்தவர் பாரதியார் என்று புகழாரம் சூட்டினார்.

சேவாலயா சார்பில் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் எஸ்.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தமது உரையில் பாரதியாரின் பல பாடல்கள் பலவற்றைப் படித்து அவற்றை பல இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசியுள்ளேன். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்யும் நிலையில், பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாட்டிற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தது மனதிற்கு நிறைவைத் தருகிறது.

1900-களின் ஆரம்பத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை நூறு. அவர்களில் 94 பேர் பாரதியாரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பிறர் ஆறு பேர் மட்டுமே இருந்தார்கள். அந்த நிலையில் தான் பாரதி பெண்கள் படிக்க வேண்டும் என்று விரும்பியவர். இன்று பாரதி இருந்திருந்தால் நூற்று முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் அவள் செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்று தேசத்தின் ஒற்றுமைக்காகப் பாடியிருப்பார். எந்த தயக்கமுமின்றி தன்னுடைய கருத்தை இந்தச் சமூகத்திற்குக் கொடுத்தவர் பாரதியார்.

உயர் சமுதாயத்தினர் படிக்கும் பள்ளியில் சாமானியர்களும் சென்று படிக்க முடியாத நிலை இருந்தது. அதை களைய வேண்டும் என்பதற்காக 125 ஆண்டுகளுக்கு முன்பாக எல்லாரும் சமம், பெண்களுக்குக் கல்வி முக்கியம், அனைத்து சமூகத்தினரும் படிக்க வேண்டும் என்று கூறி தந்தை பெரியாருக்கு முந்தைய தலைவராக முன்மாதிரியாக வாழ்ந்தது நமக்குப் பெருமை.

பாரதியார், விவேகானந்தர், மகாத்மா காந்தி ஆகிய மூவரின் கொள்கைகளை அடையாளமாக வைத்து சேவாலயா செயல்பட்டு வருகிறது. பாரதி - செல்லம்மாள் வாழ்ந்த தெருவில் இருவருக்கும் சிலை வைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரதியாரின் எண்ணங்களை செயலாக்கும் அரசு திமுக அரசு. பாரதி செல்லாம்மாள் வாழ்ந்த வீட்டில் நினைவில்லம் அமைக்க அரசு சார்பில் முயற்சி எடுக்கப்படும். பாரதி செல்லம்மாவின் 125-ஆவது திருமண நாளுக்கு முன் பாரதி செல்லம்மா உருவச் சிலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

 

Tags :

Share via