தென்மாவட்டங்களை கலக்கும் கஞ்சா விற்பனைக்கும்பல் கைதுசெய்ய காவல்துறை தீவிரம்.

by Editor / 15-12-2022 11:28:19pm
தென்மாவட்டங்களை கலக்கும்  கஞ்சா விற்பனைக்கும்பல் கைதுசெய்ய காவல்துறை தீவிரம்.

நெல்லை மாவட்டத்திற்கு ,கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து எல்லைப் பகுதிகள் வழியாக கஞ்சா கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிலையில், அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்பீர்சிங் தலைமையிலான தனிப்படை போலீஸார், அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு கஞ்சா விற்பனை  செய்பவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். விற்பனையாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பலைப் பிடிக்கக் காத்திருந்தனர்.

இந்தச் சூழலில், இன்று ஒரு மினி லாரியில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவரப்படும் தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து வாகன சோதனையைத் தீவிரப்படுத்தினார்கள். குறிப்பிட்ட லாரியில் கஞ்சா கொண்டுவரப்படுவதாகச் சொல்லப்பட்டபோதிலும், அதை முழுமையாகச் சோதனையிட்ட பின்னரும் கஞ்சா இருப்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மினி லாரியின் உள்பகுதியில் ரகசிய அறைகள் எதுவும் இருக்கிறதா என போலீஸார் தீவிரமாக பரிசோதித்தனர். அப்படி எதுவும் இருக்கவில்லை. லாரியின் ஓட்டுநரான ஸ்ரீவைகுண்டம், ராமானுஜம்புதூரைச் சேர்ந்த தளவாய்மாடன் என்பவரிடம் விசாரித்தபோதும் அவர் தனது லாரியில் தடைசெய்யப்பட்ட எந்தப் பொருளும் இல்லை என்றார்.

ஆனால் போலீசார் மினி லாரியை முழுமையாக பரிசோதித்தனர். நீண்ட நேரத்துக்குப் பின்னர், அந்த லாரியின் வெளிப்பகுதியில் இருந்த போல்டுளை கழற்றிப் பார்த்தபோது அதன் உள்ளே ரகசிய அறை அமைத்து 100 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்திவந்ததாக ஓட்டுநர் தளவாய்மாடன் தெரிவித்தார். அவற்றை தூத்துக்குடியில் உள்ள விற்பனையாளர்களுக்குக் கொண்டுசெல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

லாரி ஓட்டுநரான 24 வயது நிரம்பிய தளவாய்மாடன் கடந்த சில மாதங்களாக இது போல ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து தென் மாவட்டங்களில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக லாரி ஓட்டுநர் தளவாய்மாடன் கைதுசெய்யப்பட்டதுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன், கஞ்சா விற்பனை கும்பலைச் சேர்ந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதிச்சநல்லூரை சேர்ந்த பிரவின், புதுக்குடியை சேர்ந்த அருள்பாண்டி உள்ளிட்டோரைக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

 

Tags :

Share via