பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

by Editor / 30-06-2021 06:28:24pm
பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

 

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மாலை மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கொரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசிப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பாரதீய ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தி இருந்தார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஒரு சில மூத்த தலைவர்களுக்கு பதவிகள் வழங்கப்படலாம் என்று பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், தற்போது அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

 

Tags :

Share via