லாரி கவிழ்ந்து விபத்து, லாரியில் சிக்கிய டிரைவரை மீட்ட பொதுமக்கள்

by Staff / 30-01-2023 05:08:13pm
லாரி கவிழ்ந்து விபத்து, லாரியில் சிக்கிய டிரைவரை மீட்ட பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அய்யனார்புரம் சாலை வளைவில், அதிவேகமாக சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், லாரியில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்த லாரியின் டிரைவர் சதீஸை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்க் சேதமடைந்ததன் காரணமாக டீசல் அதிகளவில் வெளியே வந்துகொண்டிருந்தது. இதனால் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீப்பற்றி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக லாரியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குறளையம்பட்டி பகுதியில் இருந்து ஊசிமேசியாபுரம் கிராமத்திற்கு தனியார் நிறுவன கட்டுமான பணிக்காக ஜல்லி மற்றும் சிமெண்ட் கலவையை சென்ற லாரியை மேல ஈரால் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஓட்டு வந்துள்ளார். இந்த லாரி விளாத்திகுளம் அருகே உள்ள அய்யனார்புரம் சாலை வளைவில் அதிவேகமாக திரும்பும் போது நிலைதடுமாறி லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் சதீஷ் லாரியில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த விபத்தை கண்ட பகுதி மக்கள்காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தீயணைப்பு துறை வீரர்கள் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்த பொது மக்கள் லாரியில் சிக்கி இருந்த ஓட்டுனர் சதீஷை லாரியில் இருந்து பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் லாரியில் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உடன் வந்த மகாராஜன் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது லாரியின் டீசல் டேங்க் சேதமடைந்தது அதிலிருந்து டீசல் அதிக அளவில் வெளி வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட தீயணைப்பு துறை வீரர்கள் லாரியில் தீப்பற்றி விடக்கூடாது என்பதற்காக லாரி முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதை தொடர்ந்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து லாரியின் ஓட்டுனர் சதீஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via