வட மாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

by Editor / 05-03-2023 02:03:39pm
வட மாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி


திருப்பூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் கடந்த 03-ஆம் தேதி அன்று ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இவரை யாரோ கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாக வதந்தி பரவியதை அடுத்து, திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் , அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சஞ்சீவ் குமார் இறந்தது ஒரு விபத்து என்பதை புரியவைத்து அனைவரையும் போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதனால் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள் எனவும் போலியான தகவல்கள் வெளியாகி பரபரப்பானது. இதனால், வடமாநில தொழிலாளர்கள் சிலர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், துரிதமாக செயல்பட்ட காவல்துறை வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததோடு, போலி செய்திகளை பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவும் செய்தது.மேலும் போலிசெய்தியை பரப்பிய நபரை கைதுசெய்ய தூத்துக்குடி மாவட்ட போலீசார் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.இந்த நிலையில் பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை மீதும் தமிழக காவல்துறை வழக்குபதிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டரில், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என்றும், தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via