விரைவில் கூட்டுறவு சங்கக் கடன்கள் தள்ளுபடி : அமைச்சர் ஐ.பெரியசாமி

by Editor / 12-07-2021 06:39:01pm
 விரைவில் கூட்டுறவு சங்கக் கடன்கள் தள்ளுபடி : அமைச்சர் ஐ.பெரியசாமி

 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் ஆகியோருடன் பல அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க புதிய உறுப்பினர்கள் 847 பேருக்கு, ரூபாய் 4.87 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். பின்னர் பேசிய அவர், ``தமிழகத்திலுள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் எவ்வளவு பேர் வந்து கடன் கேட்டாலும் அதை வழங்க வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு வழங்கத் தயாராக உள்ளது. தமிழகத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களை, அனைவரும் பயன்பெறும் வகையில் பல்நோக்கு மையமாக மாற்றுவதற்கான திட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கல்விக் கடன், சுயஉதவிக்குழுக் கடன் ஆகியவை அரசால் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது, மங்கிய நிலையில் இருக்கும் சிறு வணிகக் கடன் திட்டம் அதிகரிக்கப்படும். சுயஉதவிக் குழுக்களுக்கு எல்லா வகைக் கடன்களும் கொடுக்க அரசு தயாராக உள்ளது என்றார்.

 

Tags :

Share via