திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா-காவல்துறைகட்டுப்பாடுகள் அறிவிப்பு.

by Editor / 30-05-2023 09:37:35pm
திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா-காவல்துறைகட்டுப்பாடுகள் அறிவிப்பு.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் சாலையின் வலது புறமாக செல்லுமாறும், ஒளிரும் ஸ்டிக்கர்களை (Reflect Sticker) ஒட்டியும் பாதுகாப்பான பாதயாத்திரை செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தும் - பக்தர்கள் ஜாதி ரீதியான உடைகள் அணிந்து வரவோ, சர்ப்ப காவடி எடுத்து வரவோ கூடாது எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்
அறிவிப்பு.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் 02.06.2023 அன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழா 01.06.2023 முதல் 03.06.2023 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக வந்தவாறு உள்ளனர்.

அவ்வாறு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையில் இடது புறமாக குழுக்களாக நடந்து செல்வதால் அதே சாலையில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் எப்போதும் இடது புறமாகவே வாகனத்தை இயக்குவதால், அதே இடது புறத்தில் செல்லும் பக்தர்கள் பின்னால் வரும் வாகனங்கள் எவ்வாறு வருகின்றன என்பதை எதிர்பார்க்க இயலாமல் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மீது  மோத வாய்ப்புள்ளதாலும், அவ்வாறு இடது புறமாக வரும் வாகனங்கள்  பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மீது மோதாமல் இருக்க வாகனங்கள் சாலையின் வலது புறம் ஏறிச்செல்வதாலும் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள், பெரும் காயம், சிறுகாயம் விபத்துகள் மற்றும் வாகனங்களுக்கும் சேதங்கள் ஏற்படுகின்றன.

எனவே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மோட்டார் வாகனச்சட்டம் சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின் படி பாதசாரிகள் எப்போதும் சாலையில் வலது புறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அப்போதுதான் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை பாதசாரிகள் கண்டுகொண்டு விபத்து நேரா வண்ணம் பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளளாம்.

அதே போன்று  பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூடுமானவரை இரவு நேரம் பாதுகாப்பான இடங்களில் தங்கி விட்டு பகல் நேரத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு, இரவு நேர பாதயாத்திரையை தவிர்க்குமாறும், ஒருவேளை இரவு நேர பாதயாத்திரை மேற்கொண்டால்  முதுகு பகுதி மற்றும் தோல் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் (Reflect Sticker) ஒட்டி பாதுகாப்பாக பாதையாத்திரை செல்லுமாறும், இந்த வைகாசித் திருவிழாவை விபத்தில்லாமல், பாதுகாப்பான முறையில் வழிபட்டு செல்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும்  திருக்கோவிலுக்கு இறைவழிபாட்டு எண்ணத்துடன் வரும் பக்தர்கள் ஜாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்து வரவோ, அதை வெளிப்படுத்தும் வகையிலானவற்றையோ, கொடிகளையோ கொண்டு வரவோ கூடாது எனவும், சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வைகாசி விசாக திருவிழா அமைதியாகவும், சிறப்புடனும் நடைபெற பக்தர்கள் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு  காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via