சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

by Editor / 19-07-2021 12:37:39pm
   சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகம் மற்றும் குளச்சல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த மீனவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் தொடர்பாக ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் விரைவில் அமைக்கப்படும்.மீனவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்வதைக் கெடுக்கும் வகையில் மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மீனவர்களுக்குப் பல்வேறு அபராதங்களை விதிக்கும் வகையில் சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். ஒன்றிய அரசு மாநில அரசுகளின் உரிமையிலும், மீனவர்களின் உரிமையிலும் தலையிடாதவாறு திட்டங்களைக் கொண்டு வருவதாக தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். எந்த சாகர்மாலா வந்தாலும் மீனவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்ய சட்டங்களைக் கொண்டு வருவதில் மீனவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.

தமிழகத்தின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் கல்வி, உணவு, மின்சாரம், ஜி.எஸ்.டி ஆகியவற்றை ஒன்றிய அரசு கையில் வைத்துக்கொண்டு, மாநில அரசை கையேந்தி நிற்க வைக்க வேண்டும் என்ற வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. காற்றின் வேகத்தில் மீனவர்கள் சில நேரங்களில் சில இடங்களை தாண்டிப் போகும் நிலை ஏற்படும். அதற்கு மத்திய அரசு அபராதம் விதிக்கின்றார்கள் எனச் சொன்னால் அதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 60 நாட்கள் ஆகின்றது. அதில் சுமார் 55 நாட்கள் கொரோனா என்ற தொற்றுநோயை விலக்குவதற்காக நடவடிக்கையை செய்துள்ளார். எல்லா துறைகளையும் ஆய்வு செய்திருக்கிறார். மீனவர்களுக்கு என்ன பாதிப்பு இருக்கிறதோ அதையெல்லாம் நிவர்த்தி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார். பேரிடர் காலங்களில் மீன்பிடிக்க போகும் மீனவர்கள் எல்லோருக்கும் திரும்பி வந்திருங்கன்னு தகவல் சொல்லப்படும். சிலபேர் ரொம்ப தூரம் போய்விடுகிறார்கள், சிலர் அதை அலட்சியமாக எடுத்துக்கொள்வதால் பாதிப்புகள் ஏற்படுகிறது. இனிமேல் திரும்பி வருவதற்கான ஆணையினை உடனே பெற்றுக்கொண்டு திரும்பி வருவதற்கான வழிகளை காண ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்தத் திட்டமிட்டிருக்கின்றோம்" என்றார்.

 

Tags :

Share via