மின் மோட்டாரை இயக்கும் செல்போன் செயலி...! பட்டதாரி இளைஞரின் அரிய கண்டுபிடிப்பு...!

by Admin / 24-07-2021 08:50:03pm
மின் மோட்டாரை இயக்கும் செல்போன் செயலி...! பட்டதாரி இளைஞரின் அரிய கண்டுபிடிப்பு...!



வீட்டிலிருந்தபடியே வயலில் உள்ள மின் மோட்டாரை இயக்கும் செல்போன் செயலியை கண்டுபிடித்து, அதனை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார் தஞ்சை, ஒரத்தநாடை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் அரவிந்த். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், பொறியியல் படித்து, பட்டம் பெற்றுள்ளார்.

 சிறு வயது முதல் விவசாயத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு, விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று விரும்பினார். ஒரத்தாநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலும், நிலத்தடி நீரை நம்பியே விவசாயகள், சாகுபடி செய்து வருகின்றனர். இதனால், வயலுக்கு நீர் பாய்ச்ச மின் மோட்டாரையே நம்பி உள்ளனர். அதிலும் மின்சாரம் எப்போது வரும், எப்போது தடைபடும் எனத் தெரியாத நிலையில், வயலிலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையை மாற்றுவதற்காக, பொறியியல் பட்டதாரி, அரவிந்த் செல்போன் மூலம் மின் மோட்டாரை இயக்கும் செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியை வயலில் உள்ள மின் மோட்டாருடன் இணைத்து விட்டால், நாம் இருக்கும் இடத்தில் இருந்தபடியே செல்போன் செயலி மூலம், மின் மோட்டாரை இயக்கி வயலுக்கு நீர் பாய்ச்ச  முடியும்.வயலிலேயே நீண்ட நேரம் காத்திருந்து மின்சாரம் வரும் போது அதனை இயக்குவதும் அதனை நிறுத்த வேண்டிய நிலையில், இதற்காக ஒருவர் வயலிலேயே நேரத்தை செலவிட வேண்டிய சூழல் இருந்து வருகிறது.

அத்துடன், இரவு நேரத்தில்  மின் மோட்டாரை இயக்கு செல்லும் போது, பாம்பு போன்ற விஷ ஜந்துகள் கடித்து, உயிர்விட்ட கதை இன்றும் தொடர்கதையாக உள்ளது. அது மட்டுமா, வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டி, சொந்த பந்தங்களின் வீட்டி விசேஷத்திற்கோ, வெளியூர்களுக்கோ செல்ல முடியாத நிலையே இருந்து வருகிறது. அல்லது மற்றவர்களை நம்பி இருக்கும் நிலை உள்ளது. இதற்கு மாற்றாக அமைந்துள்ளது, அரவிந்த்தின் அரிய  கண்டுபிடிப்பு.

இதன் மூலம் மின் மோட்டாரை இயக்குவது மட்டுமின்றி, இரு முனை மின்சாரம், மும்முனை மின்சாரம், தண்ணீர் எவ்வளவு தேவை என்பதையும் அறியும் வகையில், வடிவமைத்துள்ளார் பொறியியல் பட்டதாரி அரவிந்த். அனைவரும் பயன்பெறும் வகையில், இவர் உருவாக்கியுள்ள இந்த செயலி திட்டத்தை அப்பகுதி விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறார்.

இவரது இந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தி வரும் ஆசிரியர் ராமமூர்த்தி, பள்ளியில் இருக்கும் போதோ, அல்லது, இரவு நேரத்தில் வீட்டில் இருக்கும்போதோ, செல்போன் மூலம் மின் மோட்டாரை இயக்கி, நீர் பாய்ச்சுவதற்கும், நிறுவத்துவதற்கும், இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.விவசாயிகளின் தேவையை அறிந்து, அரவிந்த் உருவாக்கியிருக்கும் இந்த செயலியை அனைத்து விவசாயிகளும் பயன்பெரும் வகையில், உலகறிய செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

 

Tags :

Share via