‘கைத்தறி ஆடைகளை அணிய  பிரதமர் வேண்டுகோள்  நீலகிரி பெண்ணுக்கும்  பாராட்டு 

by Editor / 25-07-2021 03:53:01pm
 ‘கைத்தறி ஆடைகளை அணிய  பிரதமர் வேண்டுகோள்  நீலகிரி பெண்ணுக்கும்  பாராட்டு 

 

‘‘தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்பவர், மலைப்பகுதிகளில், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல, எளிதாக வாகன வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை ஆரம்பித்தார். இதற்காக, அவர் நடத்தும் உணவகத்தில் பணியாற்றுபவர்களிடம் பணம் சேகரித்தார். இன்று 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன’’ என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு கூறினார். மேலும் அப்பெண்ணின் முயற்சியை மனம் திறந்து பாராட்டினார்.


உயிருக்கு ஆபத்தான நேரத்தில், அவசர சிகிச்சை அளிக்க நீலகிரி மலைப் பகுதிகளில் தொலை தூரப் பகுதிகளிலிருந்து நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு வர இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆம்புலன்சில் ஸ்ட்ரெக்சர், ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி சிகிச்சை உபரணங்கள் உள்ளன.‘‘இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும். கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும்’’ என்றும் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.


பிரதமர் மோடி கடந்த 2014 -ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:
சமீபத்திய ஆய்வில் மன் கி பாத் நிகழ்ச்சி தொடர்பாக கருத்து அனுப்பும் 75 சதவீதத்தினரின் வயது 35க்கு கீழ் உள்ளது. இதன் மூலம், இந்திய இளைஞர்களின் கருத்துகள் மன் கீ பாத்தை வழிநடத்துகிறது. மக்களின் கருத்து மன்கி பாத்தை வலுப்பெற செய்கிறது.


இளைய தலைமுறையினரின் உணர்வுகளை கேட்டறிய ஒரு வாய்ப்பை இது உருவாக்கித் தந்திருக்கிறது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இடம் பெறுகிறது.


இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒன்று சேருங்கள். வரும் 15ம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். தேசபக்திக்கான உற்சாகம் நம்மை ஒன்று சேர்த்து உள்ளது.காதி பொருட்களை வாங்குவது தேசத்திற்கு ஆற்றும் சேவை.சமீப நாட்களாக காதிவிற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது. கைத்தறி மூலம் கிடைக்கும் வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு இந்திய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மூவர்ணக் கொடியை ஏந்தி இந்திய வீரர்கள் வலம் வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் விக்டரி பஞ்ச் என்னும் பரப்புரை சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரையின் மூலம் இந்திய அணியை நீங்களும் உற்சாகப்படுத்த வேண்டும்.நாளை கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட உள்ளது. துணிச்சல் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் ஒழுக்கத்தின் அடையாளமே கார்கில் போர். இதற்கு உலகமே சாட்சி. கார்கில் விஜய் திவாஸ் நாளை கொண்டாடப்படவுள்ளது. எனவே, கார்கில் போர் வீரர்களுக்கு நாம் நமது வீர வணக்கத்தை செலுத்தி கொள்வோம்.


ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும்.
வெள்ளையனே வெளியேறு என போராட்டம் நடந்ததை போல் இந்தியாவை ஒருங்கிணைப்போம் என செயல்படுவோம்.
சென்னை ஐஐடியன் முன்னாள் மாணவர் 3டி பிரிண்டிங் மூலம் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்திக் கட்டியிருக்கிறார் என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். இது மாதிரியான சோதனைகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன்.


லைட் ஹவுஸ் என்னும் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் மிக விரைவாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நவீன முயற்சிகளையும் பாராட்டுகிறேன். மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேர்மறை கருத்துகளும் அறிவாற்றாலும் பரப்பப்படுகிறது. இப்போதெல்லாம், மணிப்பூர் உக்ருல் பகுதியில் ஆப்பிள் சாகுபடி பிரபலமடைந்துவருகிறது. இதற்காக, இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்று பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். அதில் ஒருவர் ரிங்ஃபாமி. இவர் ஒரு ஏரோநாட்டிகல் இன்ஜினியர்.


கொரோனாவுக்கு பிறகு, பெர் பழத்தின் சாகுபடி அதிகரித்துள்ளது. திரிபுரா உனகோடியை சேர்ந்த இளம் நண்பரான பிக்ரம்ஜித் சக்மா பெர் விவசாயம் மேற்கொண்டு லாபம் சம்பாதித்துள்ளார். அதுமட்டுமின்றி, மற்றவர்களையும் ஊக்குவிக்கிறார்.இவர்களைப் போல புதிய சிந்தனை, செயலாக்கத்தில் இளைஞர்கள் வரவேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.

 

Tags :

Share via