பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கவிடுங்க! மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!!

by Admin / 29-07-2021 02:38:57pm
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கவிடுங்க! மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!!



பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக முன்னாள் டிஜிபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், மேல் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு மத்திய அரசிற்கு கடிதம்  அனுப்பியுள்ளது.  

முன்னாள் முதல்வர் கடந்த பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது  பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பிக்கு டிஜிபி அந்தஸ்து அதிகாரி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிக்கப்பட்ட எஸ்.பி டிஜிபியிடம் புகார் அளித்தார். புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசி ஐடிக்கு டிஜிபி உத்தரவிட்டார். இந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி மற்றும் பெண் எஸ்.பியை தடுத்த எஸ்.பி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் சிறப்பு டிஜிபி சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்ட டிஜிபி மற்றும் புகாரளித்த பெண் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். வழிமறித்ததாக கூறப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் டிஜிபி மீதான பாலியல் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தமிழக அரசிடம் கடந்த 21 ஆம் தேதி ஒப்படைத்துள்ளனர். இந்த அறிக்கையில் முன்னாள் டிஜிபி பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபணமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை மற்றும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் மத்திய அரசு மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்தின் உத்தரவை பெற்று மாநில அரசு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது சட்ட குற்றவியல் நடைமுறை. இதனால் முன்னாள் டிஜிபி பாலியல் வழக்கு தொடர்பாக சம்மந்தப்பட்ட டிஜிபி மற்றும் எஸ்.பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், மேல் நடவடிக்கையில் ஈடுபடவும் மத்திய அரசு மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஏற்கெனவே இந்த பாலியல் வழக்கை விசாரிப்பதற்காக விசாகா கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு முகாந்திரம் இருப்பதாக விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அளிக்கக்கூடிய ஒப்புதலை பெற்று முன்னாள் டிஜிபி மற்றும் எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி பாலியல் புகார் அளிக்க வரும் போது தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டிய 3 காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் அளிர்ர அறிக்கையில் சமர்பித்துள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via