சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்படுமா?

by Admin / 04-08-2021 12:34:30pm
சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்படுமா?

 

சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்பதற்கு தேவையான சட்டப் போராட்டத்தை நடத்த முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 
சென்னை எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார், பின்னர் அக்கோவிலுக்கு சொந்தமான 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததை நேரில் ஆய்வு செய்து மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில்"அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற அடிப்படையில் முதலமைச்சர் நேற்று பதாகைகளை வெளியிட்டார். முறையான பயிற்சி பெற்றவர்களை கொண்டு இனி தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது

 முதற்கட்டமாக 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை முறைப்படி துவங்க உள்ளது. எழும்பூரில் உள்ள சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுத்தமாக இல்லாததையும் அதை முறையாக சுத்தப்படுத்தி நந்தனம் அமைத்து பராமரிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

எழும்பூர் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 50,000 சதுர அடி இடம் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. தற்போது மீட்க பட்டு திருக்கோவிலுக்கு வரும் வருமானம் ஈட்டும் வகையில் வணிக வளாகம், பக்தர்கள் தங்கும் இடம் அமைக்கப்பட உள்ளது.

அறநிலையத் துறையின் மூலம் கல்லூரிகள் கட்ட முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். சென்னையில் கூடிய விரைவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு  கல்லூரி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு கோவிலுக்கு வருமானம் வரும் வகையில் வணிக வளாகங்கள் மற்றும் தேவையான இடங்களில் கல்லூரிகளும் கட்ட அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.

அறநிலையத் துறையின் மூலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கல்லூரிகளை கட்ட திட்டமிட்டு உள்ளோம். அதற்கான பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம். காணாமல் போன சிலைகள் மற்றும் சில இடங்களில் கோயில்களில் உள்ள சிலைகளை வீட்டில் கொண்டு போய் வைத்து பூஜை செய்து வருகிறார்கள்

.அப்படிப்பட்ட சிலைகளை எல்லாம் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது தேவையான சட்டப்போராட்டம் நடத்தி முதலமைச்சர் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்றார்.

 

Tags :

Share via