பயத்தை தூக்கி எறிந்தால் சிறந்த தொழில்முனைவோராக மாறிவிடலாம்-கருத்தரங்கில் அறிவுரை

by Admin / 12-08-2021 02:18:47pm
பயத்தை தூக்கி எறிந்தால் சிறந்த தொழில்முனைவோராக மாறிவிடலாம்-கருத்தரங்கில் அறிவுரை

லட்சியத்தை நோக்கிய தொடர் பயணம் வெற்றிக்கு வித்திடும். ஒவ்வொருவரும் தங்கள் பலவீனங்களை கண்ட றிந்து சரி செய்யவேண்டும்.

திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில்  நிப்ட்-டீ கல்லூரியின் தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் இயங்குகிறது. இம்மையம் சார்பில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆன்லைனில் நடந்தது.

பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் தலைமைவகித்தார். இதில் பயிற்சியாளர் நவீன் மாணிக்கம் பேசியதாவது:-
 
தொழில்முனைவோர் என்பவர் பணம் மட்டும் சம்பாதிப்பது இல்லை. உற்பத்தி செய்யும் பொருட்களால் மக்களின் ஏதேனும் ஒரு பிரச்சினைகளை சரி செய்கின்றனர். வர்த்தக நுணுக்கங்கள்படித்தால் மட்டும் வந்துவிடாது.

ரோட்டோர சிறு, குறு வியாபாரிகள் படிக்காமலேயே சிறப்பான வகையில் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.பணத்தை துரத்தி கொண்டு ஓடினால் அது நம்மைவிட இருமடங்கு வேகத்தில் ஓட்டம் பிடிக்கும்.

நாம் கனவுகளையும், உழைப்பையும் நோக்கி சென்றால் பணம் தானாக தேடிவரும். வெற்றி பெற விரும்புவோர் இரட்டிப்பு தோல்வியை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

லட்சியத்தை நோக்கிய தொடர் பயணம் வெற்றிக்கு வித்திடும். ஒவ்வொருவரும் தங்கள் பலவீனங்களை கண்ட றிந்து சரி செய்யவேண்டும். சமூகத்திலும், குடும்பத்திலும் மதிப்பு உயர சுய ஒழுக்கம் கடைபிடித்தல் கட்டாயம். எதிர்மறை சிந்தனைகளை வளரவிடக்கூடாது.

தொடர்ந்து கற்க வேண்டும். சிறந்த தலைவர்களெல்லாம் கற்றல் மூலம்  தங்களை தொடர்ந்து புதுப்பித்து கொண்டுள்ளனர். தொழில் துவங்கிய உடனேயே வெற்றி கிடைத்துவிடாது. படிப்படியாகவே இலக்கை நோக்கி அடையமுடியும்.

தோல்வி குறித்த பயத்தினாலேயே  பலரும் சுய தொழில்முனைவோராக விரும்புவதில்லை. பயத்தை தூக்கி எறிந்தால் போதும் சிறந்த தொழில்முனைவோராக மாறிவிடலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags :

Share via