சிறப்பாகச் செயல்பட்ட  அதிகாரிகளுக்கு  ஸ்டாலின் விருது

by Editor / 15-08-2021 05:11:32pm
 சிறப்பாகச் செயல்பட்ட  அதிகாரிகளுக்கு  ஸ்டாலின் விருது


‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ மூலம் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதில் சிறப்பாக செயல்பட்ட - அதிகாரிகளை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, மாவட்டங்கள்தோறும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு, தான் பதவியேற்றதும் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை" 7.5.2021 அன்று உருவாக்கப்பட்டது. மாநிலம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் இத்துறையிடம் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன. இம்மனுக்கள் துறை வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் பிரிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட செயலாக்கத்திற்காக முதலமைச்சர் உதவி மையம் என்ற இணையதள முகப்பில் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டன.


முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் இத்துறையால், 100 நாட்களில் அனைத்துத் துறைகளின் வாயிலாக மொத்தம் 4,57,645 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. இதில், மொத்தம் ஏற்கப்பட்ட மனுக்கள் 2,29,216 ஆகும்.இவற்றில் குறிப்பாக:


* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 32 ஆயிரத்து 283 பட்டா, 30 ஆயிரத்து 455 சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள்.
* ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் 19,664 கட்டமைப்புப் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் 9,444 வீடுகள் கட்ட உதவி, தனிநபர் மற்றும் பொதுக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.544.27 கோடி மதிப்பிலான பணிகள் மற்றும் இதர துறைகள் மூலம் 1,46,814 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. இவற்றில் 80 ஆயிரத்து 704 மனுக்களுக்கு நிதி ஒதுக்கீடு பெற்றதும் விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
கடந்த 100 நாட்களில், தீர்வு காணப்பட்டுள்ள மனுக்களின் இந்த எண்ணிக்கை, நம் மாநிலத்தில் இதுவரை முதலமைச்சர் தனிப்பிரிவால் இரு வருடங்களில் தீர்வு காணப்படும் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். வழக்கமாக 24 மாதங்களில் முடிக்கப்படும் இப்பணி, மூன்றே மாதங்களில், அதுவும், கொரோனா நோய்த் தொற்றுப் பேரிடர் காலத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள மனுக்களில், முழுமையான முகவரி மற்றும் தொலைபேசி எண் இல்லாமலும், தெளிவான கோரிக்கைகள் இல்லாமலும், ஆலோசனைகள் தெரிவிக்கும் வகையிலும் இருக்கின்ற மனுக்களை தற்போது ஏற்க இயலவில்லை. இருப்பினும், இம்மனுக்கள் மீது மனுதாரர்கள் சரியான விவரங்களுடன், மறுபரிசீலனை கோரினால் மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்படும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர், துறையால் நூறு நாட்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைள் குறித்த அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார். முதலமைச்சரால் நேற்று (14 ந் தேதி) தலைமைச் செயலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும், மனுக்களை கையாள்வதில் சிறப்பாகச் செயல்பட்டுள்ள மாவட்டங்களை அடையாளம் காண காரணிகள் வகுக்கப்பட்டு முதல் மூன்று இடங்கள் பெற்றுள்ள மாவட்டங்களுக்கு பாராட்டு சான்றிதழும் விருதுகளும் வழங்கப்பட்டன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்ஆகியோர் முதலமைச்சரிடம்விருதும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றனர்.

 

Tags :

Share via