கூட்டுறவு பயிர்கடன், நகை கடன்களை உடனடியாக  தள்ளுபடி செய்ய: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

by Editor / 15-08-2021 05:21:46pm
கூட்டுறவு பயிர்கடன், நகை கடன்களை உடனடியாக  தள்ளுபடி செய்ய: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்



மக்கள் விழிப்படைந்து போராட்ட களத்தில் குதிக்கும் முன்பு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன், நகை கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போதைய தி.மு.க. ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகளிலேயே ஏமாற்றம் அடைந்த மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.


தமிழக மாணவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்வி கடனை ரத்து செய்வோம் என்று அளித்த வாக்குறுதியை சுத்தமாக மறந்துவிட்டார்கள். தி.மு.க. அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, பல்வேறு நிபந்தனைகளை விதிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. 5 சவரன் நகை கடன் தள்ளுபடி சலுகை பலருக்கு கிடைக்கக்கூடாது என்னும் அளவுக்கு நிபந்தனைகளை விதிக்க தி.மு.க. அரசின் கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

2018 -ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020 -ம் ஆண்டு வரை பெறப்பட்ட நகை கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று இந்த அரசு அறிவித்தாலும், பல்வேறு நிபந்தனைகளால், பலரால் கடன் தள்ளுபடி சலுகையை பெறமுடியாது. கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மூலம் இதை தெரிந்துகொண்ட மக்கள் கொதிப்படைந்துபோய் உள்ளனர். இந்த அரசை மக்கள் குறைகூறத் தொடங்கியுள்ளனர்.


அரசு ஊழியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று கூறிக்கொள்ளும் தி.மு.க., அவர்களது பண பயனில் கைவைப்பதும், தேர்தல் அறிவிப்புகளில் ஒன்றிரண்டை நிறைவேற்றுவதாக கூறி அதிலும் புதிய புதிய நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்க திட்டமிட்டுள்ளதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக தெரிகின்றன.

எனவே தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழ்நாட்டு மக்களை இனியும் ஏமாற்றாமல், அவர்கள் விழிப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு, அதிர்ஷ்டவசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்களையும், 5 பவுன் வரை அடமானம் வைத்து நகை கடன் பெற்றவர்களுடைய நகை கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via