திருந்தி வாழ்வதாகச்சொல்லி மீண்டும் அட்டூழியம் செய்த பிணை கைதிகள்...

by Admin / 20-08-2021 01:08:37pm
திருந்தி வாழ்வதாகச்சொல்லி மீண்டும் அட்டூழியம் செய்த பிணை கைதிகள்...

திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 11 குற்றவாளிகளின் நன்னடத்தை பிணை ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளின் விவரங்களை தரம் வாரியாக பிரித்து  அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 211 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதே போல தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பல முறை சிறைக்கு சென்று பிணையில் வெளிவந்த நபர் திருந்தி வாழப்போவதாகவும், இனி குற்றசெயல்களில் ஈடுபடமாட்டேன் மீறினால் கைது நடவடிக்கையில் ஈடுபடலாம் ஒரு வருட நன்னடத்தை சான்றிதழில் கையெழுத்திட்டு செல்வது வழக்கம்.

 ஆனால் ஓராண்டிற்குள் ஏதாவது குற்றசெயல்களில் ஈடுபட்டால் நன்னடத்தை பிணையை ரத்துசெய்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 11 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நன்னடத்தை பிணையம் ரத்து செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சூளைமேடு காவல் நிலைய சரித்திரபதிவேடு குற்றவாளியான ராஜேஷ்(38) 107 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி ஓராண்டு காலத்திற்கு நன்னடத்தை பிணையம் அளித்திருந்தார்.

ஆனால் பிணையை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டதால் 201 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல் ஆயிரம் விளக்கு காவல் நிலைய குற்றவாளி பாண்டியன்(29) பிணையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

. குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் சூளைமேடு காவல் நிலையத்தில் 6 குற்றவாளிகள், சிந்தாதிரிபேட்டை 3 குற்றவாளி, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் 2 குற்றவாளி என மொத்தம் 11 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நன்னடத்தை பிணை ரத்துசெய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via