தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குறைகிறது' - பொன்முடி

by Editor / 16-04-2021 03:53:59pm
தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குறைகிறது' - பொன்முடி


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவை சந்தித்த பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில் திமுகவைச் சேர்ந்த பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 
அப்பொழுது பேசிய பொன்முடி, ''தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தமில்லாத ஆட்களின் நடமாட்டம் இருக்கிறது. ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில், 31 பேர் லேப்டாப் உடன் சென்றுள்ளனர் என்றால் அதனுடைய பொருள் என்ன? 13ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தைக் கண்டித்து 13ஆம் தேதியே புகார் கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்காததால், 14, 15 தேதிகள் என தொடர்ந்து அது நடைபெற்று வருகிறது. அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலினின் ஆணைப்படி மீண்டும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்துள்ளோம்.
நேற்று காலை நான் போட்டியிடுகிற திருக்கோவிலூர் தொகுதியில் வாக்கு எண்ணவிருக்கிற கல்லூரிக்குள், 147 மாணவர்கள் பிராக்டிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள். இந்த செய்திவந்ததும் நான் கலெக்டரிடம் பேசிய பிறகு, எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டேன் என்று சொல்கிறார். அனுமதித்தது எப்படி? தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. இங்கே தேர்தல் ஆணையரிடம் புகார் சொன்னால், 'நான் கேட்கிறேன், கேட்கிறேன்' என சொல்கிறார்கள். அவர்களுக்கே தெரியுமா, தெரியாதா எனத் தெரியவில்லை'' என்றார்.

 

Tags :

Share via