ஆலங்குடி அருகே நள்ளிரவில் மது போதையில் கோஷ்டி மோதல்- வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை

by Admin / 29-08-2021 11:03:05pm
ஆலங்குடி அருகே நள்ளிரவில் மது போதையில் கோஷ்டி மோதல்- வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை

 



ஆலங்குடி அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகர் சுண்ணாம்பு காரத்தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விஜய் என்ற செல்வகணபதி (வயது 23). படித்துவிட்டு வீட்டில் இருந்த அவர் வைக்கோல் வியாபாரம், எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று வந்தார்.

இவர் தினமும் ஆலங்குடி கல்லுக்குண்டு பகுதிக்கு தனது நண்பர்களுடன் மது அருந்த செல்வது வழக்கம். நேற்றும் அதேபோல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய விஜய் இரவில் நண்பர்களுடன் கல்லுக்குண்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே மது குடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு மது குடிக்க வந்த மற்றொரு தரப்பினருடன் மோதல் உருவானது. இதில் விஜய் தரப்பினரும், எதிர் தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். ஒருவருக்கொருவர்கையில் கிடைத்த பொருட்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து விஜய் தனியாக வீட்டுக்கு மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கலிபுல்லாநகரில் உள்ள ஒரு கோவில் அருகே சென்றபோது திடீரென்று 10 பேர் கும்பல் விஜயை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

அவர்களிடம் தப்பி ஓட முயன்றபோதும் அந்த கும்பல் தொடர்ந்து துரத்தி வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் விஜயை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மது போதையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக விஜய் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே கொலையுண்ட விஜய்யின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் இன்று காலை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via