எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் ஆவின் பாலகம்:

by Editor / 07-09-2021 03:55:54pm
எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் ஆவின் பாலகம்:

புதிய ஆவின் பாலகம் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று (6 ந் தேதி) சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தலைமையில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி முன்னிலையில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் சேப்பாக்கம் திருவல்லிகேனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவஹர், சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன், ஆவின் மேலாண்மை இயக்குனர் க.சு. கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆவின் நிறுவனம் 4.36 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 26.68 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழக அரசின் ஆணைக்கிணங்க கடந்த 16.5.2021 அன்று முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 - வீதம் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை குறைப்பினால் சுமார் 1.75 லட்சம் லிட்டர் பால் விற்பனை உயர்ந்துள்ளது மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 23 அதிநவீன பாலகங்கள், 18 பாலகங்கள், 3 ஆயிரம் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் 75 மொத்த விற்பனையாளர்கள் மூலமாக மாதம் ஒன்றுக்கு சராசரியாக 13.50 லட்சம் லிட்டர் பால் மற்றும் ரூ.25 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் பால் பொருட்களான நெய், வெண்ணை, பால்கோவா, மைசூர்பா மற்றும் ஐஸ் க்ரீம் தவிர தற்போது பன்னீர், குலோப் ஜாமுன், பால்பேடா, ரசகுல்லா, குக்கீஸ் போன்ற 82 வகையான பால் பொருட்களின் விற்பனையை, அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via