கொடநாடு வழக்கு :எடப்பாடி பழனிசாமிக்கு செக்

by Editor / 11-09-2021 03:01:48pm
கொடநாடு வழக்கு :எடப்பாடி பழனிசாமிக்கு  செக்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்டவர்களை தவிர்த்து புதிதாக கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் அண்மையில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டிருக்கிறார். விசாரணையின்போது, 'அ.தி.மு.க பிரமுகர் கூடலூர் சஜ்ஜீவனை ஏன் நீங்கள் விசாரிக்கவில்லை?' என்று கேட்டு அதிர வைத்தார்.

இதனிடையே கொடநாடு எஸ்டேட் பங்களாவின் கணினி ஆபரேட்டர் தினேஷ், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் இருவரின் மரணங்களையும் சந்தேக மரணங்களாக மாற்றி, அந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க காவல்துறை ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களின் பெயரையோ அல்லது அவர் பெயரையோ சேர்க்க வாய்ப்பு உள்ளதா என்ற பரபரப்பு அதிகரிதுள்ளது. இதனால் எடப்பாடி தரப்பு பதற்றத்தில் இருக்கிறதாம்.

இது ஒருபுறம் எனில், கொடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பது சசிகலாவிற்கு தெரியும் என்பதால் அவரிடம் போலீசார் விரைவில் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொடநாடு விவகாரத்தில் சசிகலா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார். அவரிடம் விசாரிக்கப்பட்டால் கொடநாடு வழக்கில் புதிய திருப்பத்திற்கு வாய்ப்பு உள்ளது.

இதனிடையே கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும், எடப்பாடி உறவினரின் நிறுவனம் செய்திருந்த கட்டட ஒப்பந்தங்கள் தொடர்பாக சில கோப்புகள் ஆளும் தரப்புக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கொடநாடு இரண்டாவது குற்றப்பத்திரிகை மூலம், செக் வைத்திருக்கும் ஆளும் திமுக தரப்பு, கூடுதலாக நெடுஞ்சாலைத்துறை கோப்புகளையும் அடுத்தகட்ட அஸ்திரமாக எடுத்து வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் நெடுஞ்சாலை துறை கோப்புகள் மீது ஆக்சன் எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

 

Tags :

Share via