சண்முகநாதனை சந்திக்க வீடு தேடிச்சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்

by Editor / 16-09-2021 06:26:25pm
சண்முகநாதனை சந்திக்க வீடு தேடிச்சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்

கருணாநிதியின் நிழலாக வலம் வந்து 48 ஆண்டு காலம் அவருக்கு உதவியாளராக இருந்த சண்முகநாதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு தேடிச்சென்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத அவரது குடும்ப உறவினர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.உடல்நிலை நலிவுற்று அண்மையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன், இப்போது வீட்டிலும் செவிலியர்கள் கண்காணிப்பில் சிகிச்சையை தொடர்ந்து வருகிறார்.மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நிழலாக 48 ஆண்டுகாலம் அவரோடு பயணித்தவர் சண்முகநாதன். கருணாநிதியின் கண் அசைவை வைத்தே அவர் என்ன எதிர்பார்க்கிறார், யாரிடம் எதைக் கூறச் சொல்கிறார் என்பதை அறிந்துக்கொள்வார் சண்முகநாதன். தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வந்த சண்முகநாதனை கடந்த 1967-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது உதவியாளராக அழைத்துக்கொண்டார் கருணாநிதி.கருணாநிதியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு இரண்டு முறை கோபித்துக்கொண்டு புறப்பட்ட இவரை அடுத்த ஓரிரு நாட்களில் கோபாலத்தில் ஆஜராக வைத்துவிடுவார் கருணாநிதி. சண்முகநாதனின் தந்தை மறைந்த போது இடுகாடு வரை நடந்தே சென்று அஞ்சலி செலுத்தி தனது உதவியாளரை அவரது ஊரார், உறவினர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்தியுள்ளார் கருணாநிதி. மு.க.அழகிரி, ஸ்டாலின், செல்வி, என எல்லோரும் சண்முகநாதன் பார்க்க வளர்ந்தவர்கள் தான்.

இந்நிலையில் கருணாநிதி மறைந்தது முதலே மனமுடைந்து காணப்பட்ட சண்முகநாதனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதற்காக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கூட வீட்டில் செவிலியர்கள் கண்காணிப்பில் சிகிச்சையை தொடர்ந்து வருகிறார். இதனிடையே முத்துவிழாவாக கொண்டாப்பட வேண்டிய சண்முகநாதனின் 80-வது பிறந்தநாளையொட்டி அவரை இல்லம் தேடிச்சென்று வாழ்த்தி வணங்கி வந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நேரில் சந்தித்து.

மேலும், சண்முகநாதனால் சரியாக பேச முடியாத போதும் ஸ்டாலினின் வருகையை எண்ணி மிகவும் மகிழ்ந்திருக்கிறார். நீர் ததும்பிய கண்களாலேயே ஸ்டாலினை உற்றுநோக்கிய சண்முகநாதன் அவர் இன்னும் பல்லாண்டு காலம் தமிழ் மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என வாழ்த்தியிருக்கிறார். இதனிடையே முதலமைச்சர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு இருக்கும் பரபரப்பான அலுவல் பணிகளுக்கு மத்தியிலும் தந்தையின் உதவியாளரை நேரில் காண வந்தது அவரது அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது

 

Tags :

Share via