பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த இடம்: கோவை, சென்னை

by Editor / 17-09-2021 07:13:31pm
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த இடம்: கோவை, சென்னை

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குறைந்த அளவில் குற்றங்கள் நடக்கும் இடங்களில் கோவை முதல் இடத்திலும் சென்னை இரண்டாம் இடத்திலும் உள்ளன. அதேவேளை, அதிக குற்றங்கள் பதிவான பெருநகரங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் தொடர்பாக கடந்த ஆண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த தகவல்களை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. கோவை பெருநகரத்தை பொறுத்தவரை சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 9 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது எனவும், சென்னையைப் பொறுத்தவரை சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 13.4 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, சென்னையை அடுத்து பெண்களுக்கு எதிரான குறைந்த குற்ற சம்பவங்கள் பதிவான பெருநகரங்களில் மூன்றாவது இடத்தில் கேரளாவின் கொச்சி நகரம் இடம்பெற்றுள்ளது. கொச்சியில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 37.5 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 53.8 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் பெங்களூரில் ஒரு லட்சம் பெண்களில் 67.3 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

பெண்களுக்கு எதிராக அதிக குற்ற சம்பவங்கள் பதிவான பெருநகரங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடத்தில் உள்ளது. லக்னோவில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 190.7 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது

 

Tags :

Share via