கா.செல்லப்பாவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது

by Editor / 18-09-2021 07:08:58pm
கா.செல்லப்பாவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது முனைவர் கா.செல்லப்பாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதை ஆண்டுதோறும் சாகித்ய அகாதெமி வழங்கிவருகிறது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான தமிழின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை மொழிபெயர்த்ததற்காக முனைவர் கா.செல்லப்பாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கா.செல்லப்பா 1936 ஆம் ஆண்டு காசி.விசுவநாதன் - செளந்தரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள கா.செல்லப்பா காமராசர் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்தார்.

இலக்கியத்தில் பழம்புதுமை புதுப்பழமை, திருக்குறள் முதல் கிரிக்கெட் வரை, விடுதலை சிட்டும் புரட்சிக்குயிலும், ஒப்பியல் தமிழ், ஒப்பிலக்கிய கொள்கைகளும் செயல்முறைகளும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கா.செல்லப்பாவிற்கு ரூ.50000 பரிசுத் தொகையும், கேடயமும் வழங்கப்பட உள்ளது.

 

Tags :

Share via