பொடுகு தொல்லை உள்ளதா

by Editor / 18-09-2021 07:49:36pm
பொடுகு தொல்லை உள்ளதா

தற்போது உள்ள காலகட்டத்தில், அநேகருக்கு இருக்கும் பிரச்சனை தலையில் இருக்கும் பொடுகு தொல்லை. அனைவருக்கும் தங்களுக்கு ஆழகான முடி இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் இந்த பொடுகு மொத்த அழகையும் கெடுத்து விடும். இதனால் முகப்பருக்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது மட்டும் இல்லாமல், நமது முடியை வறட்சிக்குள்ளாக்கி, பொலிவிழக்கவும் செய்யும். அதனால் தலையில் பொடுகு ஏற்பட்ட உடனே அதை சரி செய்து விட வேண்டும். இதற்காக, நாம் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டின் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே பொடுகுத் தொல்லையை விரட்டலாம். அதோடு ஆரோக்கியமான உணவு மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை முறையையும் வாழ முயற்சிக்க வேண்டும்.

வேப்பிலை: வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது பொடுகை சரிசெய்ய உதவுவதோடு, பல்வேறு கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகளையும் போக்கும். அதற்கு ஒரு கையளவு வேப்பிலையை 4 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்நீரை இறக்கி குளிர வைத்து, வடிகட்டி, அந்த நீரால் வாரத்திற்கு 2 முதல் 3 முறை தலைமுடியை அலச வேண்டும். இதனால் சீக்கிரம் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது பொடுகை விரட்ட உதவும். அதோடு இது வறண்ட தலைச் சருமத்திற்கு ஈரப்பசையை வழங்கி, வறட்சியால் ஏற்படும் தலை அரிப்பில் இருந்து விடுவிக்கும். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெயில், பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து, அந்த கலவையை தலைச்சருமத்தில் தடவி சில நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து, குறைந்தது 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், பொடுகை விரைவில் தடுக்கலாம்.

ஆப்பிள் சீடர்: வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரும் பொடுகைப் போக்கும் திறன் கொண்டது. ஏனெனில் இது தலைச் சருமத்தில் உள்ள pH அளவை சமநிலையில் பராமரித்து, ஈஸ்ட்டுகளின் வளர்ச்சியைத் தடுக்கும். அதோடு, வினிகர் மயிர்கால்களை சுத்தம் செய்கிறது. அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 2 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, அத்துடன் சிறிது டீ-ட்ரீ எண்ணெய் சேர்த்து கலந்து, தலைச் சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி சில நிமிடங்கள் மசாஜ் செய்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா இறந்த செல்கள் நீக்க உதவுவதோடு, அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சவும் செய்கிறது. மேலும் இது தலைச் சருமத்தில் pH அளவை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது மற்றும் பொடுகை உண்டாக்கும் பூஞ்சைகளின் வளர்ச்சியையும் குறைக்கிறது. அதற்கு தலைச்சருமத்தை முதலில் நீரில் நனைத்து, பின் ஒரு கையளவு பேக்கிங் சோடாவை தலைச்சருமத்தில் தவி 2 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என சில வாரங்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பு: பேக்கிங் சோடா பயன்படுத்திய பின் தலைக்கு ஷாம்பு பயன்படுத்தக்கூடாது.

வெள்ளை வினிகர்: வெள்ளை வினிகர் பொடுகைப் போக்கும் மிகச்சிறந்த வீட்டு சிகிச்சைகளுள் ஒன்று. வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், தலைச் சருமத்தில் உள்ள பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுத்து, அரிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒன்றரைக் கப் வெள்ளை வினிகரில் 2 கப் நீரை சேர்த்து கலந்து, தலைச்சருமம் மற்றும் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்த நல்ல பலனைக் காணலாம்.

ஆலிவ் ஆயில்: தலைச்சருமத்தில் வறட்சி அதிகரிக்கும் போது தான் பொடுகு வருகிறது. ஆனால் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தினால், தலைச்சரும வறட்சி தடுக்கப்பட்டு, போதுமான ஈரப்பதத்துடன் எப்போதும் இருக்கும். அதற்கு சிறிது ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைச் சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த துணியால் தலைமுடியைச் சுற்றி, குறைந்து 45 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை செய்ய வேண்டும்.

டீ-ட்ரீ ஆயில்: டீ-ட்ரீ ஆயிலில் சக்தி வாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பொடுகைப் போக்கும் மிகச்சிறப்பான சிகிச்சைப் பொருள். அதற்கு சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் பொடுகு மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சையில் உள்ள அமிலம், பொடுகை உண்டாக்கும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும். மேலும் இது தலைச் சருமத்தில் ஏற்படும் அரிப்பில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். அதற்கு பாதி எலுமிச்சை சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைச் சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இல்லாவிட்டால், சிறிது எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து, தலைச்சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து தலைமுடியை அலசி, பின் ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.

ஆஸ்பிரின்: ஆஸ்பிரினில் உள்ள சாலிசிலிக் அமிலம், தலைச்சருமத்தை சுத்தம் செய்து, பொடுகைக் கட்டுப்படுத்த உதவும். அதற்கு 2 ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து, அதை ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, பின் அதைக் கொண்டு தற்போது தலைமுடியை சுத்தம் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பொடுகில் இருந்து விடுபடலாம்.

 

Tags :

Share via