Bad Bank என்றால் என்ன?

by Editor / 20-09-2021 06:50:24pm
Bad Bank என்றால் என்ன?

 

வங்கிகளின் முக்கிய தொழில் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் பெற்று, அந்த டெபாசிட்டை அடிப்படையாக வைத்து தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும். வங்கிகளின் அடிப்படை தொழில் இதுதான். ஆனால் கொடுத்த கடன்கள் அனைத்தும் திரும்பி வரும் என சொல்ல முடியாது. அதனால் சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு கொடுத்த கடன்களில் சில சதவீதம் அளவுக்கு திரும்ப கிடைக்காமல் போகும். இவற்றை வாராக்கடன்கள் என அழைக்கிறோம்.

வாராக்கடன்கள் அதிகரிப்பது வங்கிகளுக்கு மட்டும் கெடுதல் அல்ல, பொருளாதாரத்துக்கும் கேடு. வாராக்கடன் அதிகரித்தால், எவ்வளவு தொகை வரவில்லையோ அந்த தொகைக்கு ஈடாக வங்கியின் லாபத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனால் வங்கியின் லாப வரம்பும் குறையும். ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு வங்கியின் வாராக்கடன் அதிகரித்தால் வங்கியை நடத்த முடியாத சூழல் ஏற்படும். மேலும் வாராக்கடன் அதிகமாக இருந்தால் அடுத்த புதிதாக வரும் ஒரு வாடிக்கையாளர் / நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க முடியாத சூழல் உருவாகும்.

அதனால் வங்கிகளின் வாராக்கடன் என்பது உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினை. இதுவரை வங்கிகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு வாராக்கடன் இருக்கிறது. இந்த தொகை மிகப்பெரிய தொகை. இதுவரை வாராக்கடன் ஏற்பட்டு விட்டால், இதற்கென பிரத்யேக குழுவை அமைத்து வாராக்கடன் வசூலிப்பது அல்லது சம்பந்தப்பட்டவரின் சொத்துகளை விற்பது உள்ளிட்ட பணிகளை வங்கிகள் செய்யும். இது வங்கிகளுக்கு மிகப்பெரிய சிக்கல்.

இதற்காக உருவாக்கப்பட்டதுதான் பேட் பேங்க். வங்கிகள் தங்களிடம் உள்ள கடன்களை இந்த பேட்பேங்குக்கு விற்கும். அந்த கடனில் தற்போதைய மதிப்பில் 15 சதவீதம் வரை இந்த பேட் பேங்க் கொடுத்துவிடும். மீதமுள்ளவை படிப்படியாக வசூலிக்கப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்படும்.

பேட் பேங்க் என்பது ஒரு வங்கி கிடையாது. இரு வங்கிகள் சேர்ந்தவைதான் பேட்பேங்க். ஒரு வங்கி National Asset Reconstruction Company. (இதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 51 சதவீதமாகும். ரூ.500 கோடிக்கு மேலான வாராக்கடனை இந்த வங்கி ஏற்றுக்கொள்ளும்) இந்த நிறுவனம் வங்கிகளிடம் இருந்து வாராக்கடன்களை வாங்கும்.

மற்றொரு நிறுவனம் India Debt Resolution Company. இந்த நிறுவனம் வாங்கப்பட்ட வாராகடன் உள்ள நிறுவனத்தில் உள்ள சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கையில் இறங்கும். இந்த இரண்டும் சேர்ந்துதான் பேட் பேங்க் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via