அதிபர் பிடனுடன் பிரதமர் மோடி ஆலோசனை

by Editor / 25-09-2021 04:04:56pm
அதிபர் பிடனுடன் பிரதமர் மோடி ஆலோசனை


அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
'குவாட்' மாநாடு மற்றும் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திப்பதற்காக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு நேற்று சென்றார். பிரதமராக பதவியேற்ற பின் அமெரிக்காவுக்கு ஏழாவது முறையாக மோடி சென்றுள்ளார்.
அமெரிக்க அதிபராக பிடன் பதவியேற்ற பின், அவரை தற்போது தான் பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து பேசினார்.

மோடி பேசுகையில், அமெரிக்காவின் முன்னேற்றத்தில் இந்திய வம்சாவளியினர் பெரும் பங்காற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வரும் 1௦ ஆண்டுகளில் உலகம் எப்படியிருக்கும் என்பதை உங்கள் தலைமை வடிவமைக்கும் என நம்புகிறேன். இந்திய - அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தவதற்கான விதைகள் ஊன்றப்பட்டுள்ளன. இப்போது உலகை வழிநடத்தும் சக்திகளில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி வருகிறது; இதை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய - அமெரிக்க உறவில் வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை மேலும் மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேசுகையில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்பது உறுதி. இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயம் துவக்கப்பட்டுள்ளது. கொரோனா, தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றின் சவால்களையும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் வளர்ச்சிப் பணியில் பல லட்சம் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தோ -- பசிபிக் கடலில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, ஏ.யு.கே.யு.எஸ்., என்ற, 'ஆகுஸ்' பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் கீழ் அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து 12 அணு நீர்மூழ்கி கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க உள்ளன. இக்கப்பல்கள் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இதே கடல் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, 'குவாட்' என்ற அமைப்பின் கீழ் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகியவை ஒன்றிணைந்து உள்ளன.அப்படியிருக்கையில், அதே பிராந்தியத்தில் இந்தியா, ஜப்பானை தவிர்த்து மேலும் ஒரு அமைப்பு எதற்கு என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.
இது குறித்து, வெளியுறவு விவகாரத்துறை நிபுணரும், எழுத்தாளருமான பிரம்மா செல்லானே கூறியதாவது:
'ஆகுஸ்' என்ற இந்த அமைப்பு உருவாகி இருப்பதால், 'குவாட்' அமைப்பின் முக்கியத்துவம் நாளடைவில் வலுவிழக்கும். அமெரிக்காவுடனான உறவில், ஆஸ்திரேலியா அனுபவிக்கும் பலன்கள் அனைத்தும், இந்தியா மற்றும் ஜப்பானுக்கு கிடைக்காமல் போகும்.
இந்த இருநாடுகளின் முக்கியத்துவம் குறையும். அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட உறவை பேணும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும். மேலும், இந்த புதிய அமைப்பின் வாயிலாக அஸ்திரேலியாவில் இருந்து லாபகரமான ராணுவ ஒப்பந்தங்கள் அமெரிக்காவுக்கு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via