புதுவை கடற்கரையில் உருவாக்கிய  மணற்பரப்பு

by Editor / 28-09-2021 05:26:44pm
புதுவை கடற்கரையில் உருவாக்கிய  மணற்பரப்பு

 


புதுச்சேரி தேங்காய்த் திட்டு துறைமுகத் துவாரம் தூர்வாரப்படுவதால் புதுச்சேரி கடற்கரையில் மீண்டும் மணற்பரப்பு அதிக அளவில் உருவாகத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் அனைவரையும் கவரும் இடங்களில் காந்தி சிலை அமைந்துள்ள ஒன்றரை கி.மீ. நீளமுள்ள அழகிய கடற்கரைச் சாலையும் ஒன்று. கடற்கரையில் 2004-ம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு மணல் பரப்பு குறைந்தது. இதனால் கற்களைக் கொட்டி, தடுப்பு அமைக்கப்பட்டது.
தேங்காய்த் திட்டில் துறைமுகம் அமைக்கப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாகக் கடல் நீர் உட்புகுந்து இக்கடற்கரையில் மணற்பகுதி தென்படாமல் போனது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி தேங்காய்த் திட்டு துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படுகிறது. தூர்வாரப்படும் மணல், காந்தி சிலை அருகே கொட்டப்படுகிறது. இதனால் புதிதாக மணல் பரப்பு அமைவதுடன் அடிக்கடி கடல்நீர் உள்வாங்கி வருகிறது. இப்போது சுமார் 300 மீட்டர் தொலைவு வரை கடல் நீர் உள்வாங்கி மணல் பரப்பு தென்பட்டது.
இதுபற்றித் துறைமுக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "துறைமுக முகத்துவாரத்தில் 1985-ல் கல் கொட்டப்பட்டது. இதனால் 2 கி.மீ. தொலைவுக்குக் கடல் அரிப்பு ஏற்பட்டது. முகத்துவாரம் வழியே 4 லட்சம் கியூபிக் மீட்டர் மணலைத் தூர்வாரி, கடற்பகுதியில் கொட்ட அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படாததால் கடற்கரை மணல் பரப்பு காணாமல் போனது.இப்போது ரூ.27 கோடியில் 7 லட்சம் மீட்டர் கியூபிக் மீட்டர் மணலை அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் காந்தி சிலை அருகே கொட்டப்படுகிறது. 2 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் கடற்கரையில் கொட்டப்படுகிறது. இதனால் கடற்கரையில் மணல் பரப்பு உருவாகி வருகிறது" என்று தெரிவித்தனர்.

 

Tags :

Share via