நவராத்திரி .கொண்டாடுவதன் சிறப்பு

by Editor / 07-10-2021 07:56:25pm
நவராத்திரி .கொண்டாடுவதன் சிறப்பு

சக்தி எனும் அம்மனை நோக்கி இருக்கக்கூடிய விரதங்களில் ஒன்று தான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவையாக விளங்கக்கூடிய சக்தியை போற்றக்கூடிய விரதம்  அனுஷ்டிக்கப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் மகாளய பட்சம் எனும் 15 நாட்கள் அதாவது புரட்டாசி மாதம் வரும் பெளர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையிலான காலம் மாகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. பட்சம் என்றால் 15 என்று பொருள். மகாளயா என்றால் ஒன்று கூடுவது என்று பொருள்.மகாளய அமாவாசை முடிந்தவுடன் துர்க்கை அம்மனை வழிபடக்கூடிய நவராத்திரி பூஜை வழிபாடு தொடங்குவது வழக்கம்.


இந்திய மக்களால் கொண்டாடப்படக்கூடிய தீபாவளி, பொங்கல், போன்ற பெரிய பண்டிகைகளைப் போல இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படக்கூடிய முக்கிய பண்டிகை தான் நவராத்திரி.
9 நாட்கள் கொண்டாடப்படக்கூடிய இந்த பண்டிகை அம்மனுக்குரிய விரத வழிபாடாகும். இந்த நாட்களில் கொலு வைப்பது, நவராத்திரிக்கான உணவு வகைகள் வைத்து இறைவனை வழிபடுவது வழக்கமாகும்.


2021ம் ஆண்டு நவரத்திரி விழா அக்டோபர் 7ம் தேதி (புரட்டாசி 21) தொடங்கி அக்டோபர் 14, 15ம் தேதி முறையே ஆயுத பூஜை எனும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி கொண்டாடப்பட்டு நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும்.
பெண் தெய்வங்களை கொண்டாடும் வகையில், இந்து மத விழாவான நவராத்திரி அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.


வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூ வைத்து அம்மனை அலங்கரிப்பார்கள். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். வடமாநிலங்களில் நவராத்திரி மிகவும் விசேஷமாக கொண்டாடுவது வழக்கம்.


நவராத்திரி முப்பெரும் தேவிகளான அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோரை விரதம் இருந்து வழிபடும் நாட்கள்.நவராத்திரி சோழர்கள் காலத்தில் அரச விழாவாக கொண்டாடப்பட்டது என்ற சான்றுகளையும் புராணங்கள் கூறுகிறது. நவராத்திரியின் ஒன்பது தினங்களும் அம்பிகைக்கு ஒன்பது விதமான புஷ்பங்களை கொண்டு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்யப்படும். வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவதும் வழக்கம். பல கோவில்களிலும் கொலு வைத்து பூஜை செய்து வழிபடுதலும் வழக்கத்தில் உள்ளது. நவராத்திரி விரதம் மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். இந்த ஒன்பது நாட்களும் விரதத்தை முறையாக கடைப்பிடித்து பூஜை செய்தால் வீட்டில் லட்சுமி தங்கும். செல்வம் பெருகும். கேட்டது எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.


பொதுவாக வீடுகளில் கொலு பொம்மை வைப்பவர்கள் 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் என அவர்கள் வசதிகேற்ப வைக்கலாம். கொலு படி வைப்பதற்கு காரணமே, படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர வேண்டும் என்பதை உணர்த்த தான். இந்த கொலு படியில் பொம்மைகளை அடுக்கும் போது எப்போதுமே இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கொலு படியின் ஒவ்வொன்றில்ஓரறிவு,ஈரறிவு, மூவறிவு உயிரனங்களை வரிசைப்படுத்த வேண்டும். இந்த படியில் எந்த குழப்பமும் கொள்ளாமல் வரிசைப்படுத்த வேண்டும்.ஒருவேளை கொலு வைக்க முடியவில்லை என்றால், சாதாரணமாக நாம் வழிபடக்கூடிய தெய்வங்களுக்கு பூ அலங்காரங்கள் செய்து, நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும், தானியங்களை வேகவைத்து இறைவனுக்கு படைக்கலாம்.

ஏனெனில் இந்த 9 நாட்களும் இறைவனுக்கு மிகவும் விசேஷமான நாட்களாக பார்க்கப்படுகிறது. வழிப்பட மறவாதீர்கள். முதல் படியில் மரம், செடி, கொடி என ஓரறிவு உயிரினங்களை வரிசைப்படுத்த வேண்டும். இரண்டாவது படியில் ஈரறிவு உயிரினங்கள். அதாவது சங்கு போன்றவற்றை வைக்கலாம்.மூன்றாவது படியில் மூவறிவு உயிரனங்களான கரையான், எறும்பை வைக்க வேண்டும். நான்காவது படியில் நான்கறிவு உயிரினங்கள் நண்டு , நத்தை ஐந்தாவது படியில் பறவைகள், விலங்கினங்கள் வைக்கலாம். ஆறாவது படியில் திருமணங்கள், மனிதர்கள்,கடை, வியாபாரம், நடன பொம்மைகளை வைக்கலாம். ஏழாவது படியில் மகான்களின் பொம்மைகளை வைக்கலாம். எட்டாவது படியில் தசாவதாரம், அஷ்டலட்சுமிகளின் பொம்மைகள் வைக்கலாம். ஒன்பதாவது படியில் பார்வதி, சரஸ்வதி, லெட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகளும், பூரண கலச கும்பம், பிள்ளையார் பொம்மை வைக்கலாம்.

 

Tags :

Share via