தக்காளி விலை திடீர் உயர்வு ஏன் ?

by Editor / 13-10-2021 07:01:22pm
தக்காளி விலை திடீர் உயர்வு ஏன் ?

 

தமிழகத்தில்  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருள் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது. இது போதாதென்று, அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. அதில், குறிப்பாக தக்காளியின் விலை 3 மடங்குக்கு மேலாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நாட்டுத் தக்காளி, தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பண்டிகைகள் நெருங்கும் நிலையில் தக்காளி விலையேற்றத்தால் பொதுமக்கள் தவித்துள்ளனர்.


தமிழகத்தில் கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில், தக்காளி சாகுபடி, அதிக அளவில் செய்யப்படுகிறது. ஆனால், உற்பத்தி போதுமான அளவில் இல்லாததால், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலமாக தக்காளி தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆயினும், மழை காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது.


ஒரு கிலோ நாட்டு தக்காளி சென்னை கோயம்பேட்டில் கிலோ 80 ரூபாய்க்கும், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 25 முதல் 30 ரூபாய்க்கும், திருச்சியில் 45 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் அவ்வபோது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், செடிகளிலேயே தக்காளி அழுகும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மழை தொடரும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via