முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 9 தனிப்படைகள்

by Editor / 20-12-2021 05:38:34pm
முன்னாள் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜியை பிடிக்க  9 தனிப்படைகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மோசடி புகாரில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சரை பிடிக்க இதுவரை 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு உள்ளது.

அவர் மட்டுமின்றி பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக  காவல்துறை இவரை கைது செய்யும் முனைப்பில் உள்ளது.

முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்ற தகவல் கிடைத்ததும்  கடந்த வெள்ளிக்கிழமை ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். விருதுநகரில் அதிமுக சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் அப்படியே தலைமறைவாகி தப்பித்தார்.

இதையடுத்து இவரை பிடிப்பதற்காக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணை தென் மாவட்டங்கள், வடமாவட்டங்கள், சென்னை என்று தனி தனியாக இந்த படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. ராஜேந்திர பாலாஜியின் வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடுகளில் அவரை போலீசார் தேடினர். பின்னர் அவருக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்.

மேலும் இவரின் செல்போன்கள் போலீசின் கண்காணிப்பில் உள்ளது. ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசிய 600 நபர்களின் நம்பர்களை போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ராஜேந்திர பாலாஜி மீண்டும் போன் செய்கிறாரா என்று பார்த்து வருகிறார்கள். ராஜேந்திர பாலாஜியுடன் பேசினால் அதை வைத்து அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

அதன்படி பழைய மாடல் பட்டன் போன் ஒன்றில் ராஜேந்திர பாலாஜி புது சிம் போட்டு பயன்படுத்தி வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

உளவுத்துறையும் இவர் பெங்களூரில் இருக்கலாம் என்று உறுதி செய்துள்ளதாம். இதனால் இவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர். விமானம் மூலம் ஒரு தனிப்படை பெங்களூரில் களமிறங்கி உள்ளது. 
 

 

Tags :

Share via