ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில்  உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு  கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி 

by Editor / 21-05-2021 07:15:38pm
 ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில்  உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு  கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி 


 

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் வாரிசுகள், தீவிர காயமுற்றோர் என 17 நபர்களுக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி நியமன ஆணைகளை முதல்வர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக, அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, தங்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி வழங்கவேண்டும் என வலியுறுத்திவந்த அவர்கள், அண்மையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கை மனுவை அளித்திருந்தனர். அந்தக் கோரிக்கை மனுவை முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றதன் விளைவாக, அவர்களுக்கு இந்தப்பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு நிதி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார். அதில், ”மக்களுக்கு எதை செய்யக்கூடாது என்பதற்கு முந்தைய அதிமுக அரசு உதாரணம். எதை செய்யவேண்டும் என்பதை உணர்ந்து தலைவர் ஸ்டாலின், ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பத்தாருக்கு அரசுப் பணி ஆணையை வழங்கினார். அந்த நிகழ்வில் உடனிருந்தது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via