பெரிய கப்பல்களும் ராமேஸ்வரம் வந்து செல்ல வசதியாக புதிய பாம்பன் ரயில் பாலம்

by Editor / 04-06-2022 09:35:40am
பெரிய கப்பல்களும் ராமேஸ்வரம் வந்து செல்ல வசதியாக  புதிய பாம்பன் ரயில் பாலம்

 

ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைக்கும் வகையில் பாக்ஜலசந்தியில் பாம்பன் ரயில் பாலம் கடந்த 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதில் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த பாலம் 145 கிர்டர்களுடன் 2.06 கி.மீ. தூரத்திற்கு அமையப்பெற்றுள்ளது.  கிர்டர்கள் ஒவ்வொன்றும் 12.2 மீட்டர் நீளம் உடையது.

பாம்பன் பாலத்தின் மையத்தில் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக, இருமருங்கிலும் பிரத்தியேக தூக்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இது 65.23 மீட்டர் நீளம் உடையது.மீட்டர் கேஜ் ரயில்களுக்காக இயங்குவதற்காக கட்டப்பட்ட பாம்பன் பாலம்,  கடந்த 2006 - 07 ஆம் நிதியாண்டில் அகலப்பாதை ரயில் போக்குவரத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. இருந்த போதிலும் 100 ஆண்டு பழமையான பாலம், புயல்- மழை காரணமாக சேதம் அடைந்து வருகிறது. அதுவும் தவிர கடல் மட்டத்தை ஒட்டி அமைந்து உள்ள கிர்டர்கள், கடல் நீரால் துருப்பிடிக்கிறது.
எனவே பாம்பன் கடலில் புதிய பாலத்தை கட்டுவது என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூபாய் 279 கோடி ஒதுக்கப்பட்டது.

பாம்பன் புதிய பாலம் 18.3 மீட்டர் உயரத்தில் 99 கிர்டர்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் மத்தியில் இருபுறங்களையும் இணைத்து லிப்ட் போல மேலே செல்லும் வகையில்  தூக்கு பாலம் அமைய உள்ளது. பிற்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமையும் வகையில் தூண்கள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது‌. தற்போது ஒரு ரயில் பாதை அமைக்கும் வகையில் கிர்டர்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன. கடல் மண் பரிசோதனை முடிவுகள் காரணமாக 1.5 மீட்டர் சுற்றளவுள்ள குவியல் முறை தூண்கள் அமைக்கப்படுகிறது. கிர்டர்கள் 18.3 மீட்டர் இரும்புத் தகடுகளால் உருவாக்கப்படுகிறது. 
இதனை பிரம்மாண்ட டவர்கள் மூலம் செங்குத்தாக உயர்த்தும் வகையில் மெகா லிப்ட் தயாராகி வருகிறது. இதன் நீளம் 72.5 மீட்டர்கள் ஆகும்.

 பாம்பன் பாலத்திற்கான கட்டுமான பணிகளை வடிவமைப்பதற்காக சத்திரக்குடி ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட  தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கட்டுமான பொருட்கள் சர்வதேச தரத்துடன் வடிவமைக்கப்பட்டு, பாம்பன் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, புதிய கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படுகிறது.

 பாம்பன் புதிய பாலத்தை சாலை போக்குவரத்து பாலத்துக்கு இணையாக 17 மீட்டர் வரை உயர்த்த முடியும். இதன் மூலம் பெரிய கப்பல்களும் ராமேஸ்வரம் வந்து செல்ல வழிவகை ஏற்படும்.

பாம்பன் கடலுக்கு நடுவில் 35 மீட்டர் ஆழத்திற்கு அஸ்திவாரம் அமைக்கப் பட்டு, தூண்கள் இடம்பெற்று வருகிறது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாம்பன் பாலம் அடுத்த ஆண்டு பயணிகள் போக்குவரத்துக்காக தயாராகி விடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரிய கப்பல்களும் ராமேஸ்வரம் வந்து செல்ல வசதியாக  புதிய பாம்பன் ரயில் பாலம்
 

Tags : The new Pamban Railway Bridge is convenient for large ships to reach Rameswaram

Share via