சந்திராயன்-2 தோல்வி? – விளக்கம் தெரிவிக்க பெற்று மத்திய அரசுக்கு உத்தரவு.

by Editor / 03-12-2022 07:51:18am
சந்திராயன்-2 தோல்வி? – விளக்கம் தெரிவிக்க பெற்று  மத்திய அரசுக்கு உத்தரவு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருளப்பபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காகச் சந்திராயன்-2 கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ கூறியது. ஆனால், எனது ஆய்வில் சந்திராயன்-2 மிஷன் பணி தோல்வியடையவில்லை. அமெரிக்காவின் NASA/CIA-வால் திட்டமிட்டு தோல்வி அடைந்ததாக திசை திருப்பப்பட்டது.

போலி மற்றும் தவறான புகைப்படங்களை வெளியிட்டு சந்திராயன் – 2 முடிவை தவறாக
வெளியிட்டுள்ளனர். இதை நான் கண்டுபிடித்தேன். பிறகு திருவனந்தபுரம் VSSC தலைவர் அலுவலகத்தில் ISRO அதிகாரிகளிடம் 2 மணி நேரம் விளக்கமளித்து எனது ஆய்வு கண்டுபிடிப்பு பற்றி விளக்கினேன். எனது கண்டுபிடிப்பை சரிபார்க்க பேலோட் (அறிவியல் கருவி) சேர்ப்பதாக இஸ்ரோ உறுதியளித்தது. ஆனால், இதுவரை ISRO உறுதியளித்தபடி பேலோட் சேர்க்கவில்லை.

நான் அனுப்பிய மின்னஞ்சல்கள், மனுக்களுக்கு ISRO பதிலளிக்கவில்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் சந்திராயன்-2 மிஷன் உண்மையிலேயே தோல்வி அடைந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்ய விண்வெளி ஆராய்ச்சி துறை சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 

Tags :

Share via