ஏப்பம், வயிற்றில் இருக்கும் பிரச்சனையின் அறிகுறி!

by Admin / 28-06-2021 12:18:26am
ஏப்பம், வயிற்றில் இருக்கும் பிரச்சனையின் அறிகுறி!

ஏப்பம், வயிற்றில் இருக்கும் பிரச்சனையின் அறிகுறி!


நம்மில் பெரும்பாலானோருக்கு  வயிறு நிறையச் சாப்பிட்டபிறகு இயல்பாக ஏப்பம் வருவதுண்டு. சிலர், சாப்பிட்ட பிறகு சத்தமாக ஏப்பம் விட்டால்தான் நிம்மதியாக உணர்வார்கள். ஏப்பம் வருவது இயல்பான உடலியல் நிகழ்வுகளில் ஒன்றாகவும் செரிமானத்தின் அறிகுறியாக நம்பப்படுகிறது. 

ஒரு நாளில் ஓரிரு முறை ஏப்பம் வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சாப்பிட்டு முடித்ததும் அடிக்கடி, அதிக சத்தத்துடனும் வாடையுடனும் தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருந்தால், வயிற்றில் ஏதோ பிரச்னை என்று பொருள். 

ஏப்பம் எதனால் வருகிறது?

நாம் உணவு சாப்பிடும் போதும், தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீர் அருந்தும் போதும், சிகரெட் பிடிக்கும் போதும், மூச்சை இழுக்கும் போதும் ஏராளமான காற்று நமது வயிற்றினுள் செல்கிறது. இவ்வாறு வயிற்றில் செல்லும் காற்றுதான் பின்னர் ஏப்பமாக வெளிப்படுகிறது. 

நிறைய காற்று வயிற்றினுள் சேர்வது  வயிறு பெரிதாதல், குறைந்த அளவு உணவு உட்கொண்டாலும் வயிறு நிறைந்து காணப்படுதல் போன்ற   பிரச்னைகளை உண்டாக்கும்.  

ஏப்பம் செரிமானத்தின் அடையாளமா?

உணவு உட்கொள்ளும் போது நமக்குத் தெரியாமலே வயிற்றினுள் சேரும் காற்று ஓரிரு முறை ஏப்பமாக   வெளிப்படுவதனால், உடலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. ஒரு சிலர் தங்களை அறியாமலே ஏராளமான காற்றை விழுங்கி விடுவார்கள். பின்னர் தொடர்ச்சியாக, 20 - 30 தடவைகளுக்கு மேல் ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பார்கள். 

நம்மில் பலர் ஏப்பம் வெளிப்படுதல் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆனதற்கான அடையாளம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஏப்பத்திற்கும் நம்முடைய செரிமான சக்திக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

ஏப்பத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

ஏப்பம் வெளிப்படுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஒரே எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரி, வடை போன்ற சிற்றுண்டி வகைகள், எண்ணெயில் நன்றாக வறுத்தெடுக்கப்படும் மீன், கோழி போன்ற அசைவ உணவு வகைகள் போன்றவற்றை அடிக்கடி ஏராளமாகச் சாப்பிடுபவர்களுக்கு ஏப்பம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். எண்ணெய் உணவுப் பண்டங்களைக் குறைப்பது, காற்றை விழுங்குவதைத் தவிர்ப்பது போன்றவை மூலம் பெருமளவு ஏப்பம் வெளிப்படுவதை கட்டுப்படுத்த முடியும். 

அவசரக் கோலத்தில் சாப்பிடுவது, அடிக்கடி கார்பனேட்டட் டிரிங்ஸ் அருந்துவது, பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பழம், பழைய கோதுமை பிரெட் ஆகியவற்றை அதிகளவு சாப்பிடுவதாலும் அவஸ்தையான ஏப்பம் வரலாம். 

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மாத்திரைகள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் அருந்தும் டானிக், வலிநிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றின் பக்க விளைவுகளாகவும் ஏப்பம் வரும். 

அடிக்கடி வரும் ஏப்பத்தை தடுக்க

அன்றாடச் சமையலில் சேர்க்கும் இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சில எளிய மூலிகைகள் மூலம் எளிதாகக் குணப்படுத்தலாம். 

இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி அது மூழ்குமளவு எலுமிச்சைச்சாறு விட்டு தேவைக்கேற்ப இந்துப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த நிலையில் அந்த இஞ்சித்துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்து வந்தால் ஏப்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும். 

உணவில் அடிக்கடி பிரண்டைத் துவையல், வேப்பம்பூ ரசம், இஞ்சித் துவையல், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலைத் துவையல் செய்து சாப்பிட்டு வருவது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புளித்த ஏப்பம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும். 

தினம் 4 - 5 பூண்டுப் பல்லை அவித்து காலை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். 

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பம் வரும் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம். 

ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடித்தால் ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம். 

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். 

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும். 

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும். 

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.  அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும். 

தினமும் ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடித்தால், ஏப்ப பிரச்சனை குணமாகும். 

அதிமதுரத்தைப் பொடியாக்கிச் சுவைப்பது, சாப்பிட்டவுடன் வெற்றிலை போடுவது, புதினா ஜூஸ் போன்றவையும் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும். 

இதில் ஏதாவது ஒற்றை தினமும் பின்பற்றி வந்தால் ஏப்பத்திலிருந்து தப்பிக்கலாம்.

இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

 

Tags :

Share via