ஓய்வு பெறும் நாளில் தற்கொலை செய்து கொண்ட தபால்காரர் வழக்கறிஞர் மீது வழக்கு.

by Editor / 14-01-2023 09:56:56pm
ஓய்வு பெறும் நாளில் தற்கொலை செய்து கொண்ட தபால்காரர் வழக்கறிஞர் மீது வழக்கு.

திருவாரூர் மாவட்டம் திருமதிக் குன்னம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராவணன் வயது 60.இவர் தாழக்குடி அஞ்சல் நிலையத்தில் தபால்காரராக  பணியாற்றி வருகிறார்.இவருக்கு விக்னேஷ் குமார் வினோத்குமார் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு தாழக்குடி அஞ்சல் நிலையத்திற்கு உட்பட்ட சூரனூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான டெல்லி பாபு என்பவருக்கு பார்சல் ஒன்றை இவர் டெலிவரி செய்துள்ளார். 

அந்த பார்சலில் புடவை இல்லை என வழக்கறிஞர் டெல்லி பாபு அஞ்சல் நிலைய உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்தப் பிரச்சனை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ராவணன் ஓய்வு பெற தனது பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலையில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனையடுத்து கொரடாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ராவணன் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் ராவணன் குடும்பத்தினர் காவல் துறையினருக்கு கொடுத்துள்ள புகார் மனுவில் ராவணன் தனது இளைய மகன் வினோத்குமாருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக டெல்லி பாபு கூறியதை நம்பி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் இதுவரை அரசு வேலை வாங்கித் தரவில்லை என்றும் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த ராவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் எனவே உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரடாச்சேரி காவல்துறையினர் வழக்கறிஞர் டெல்லி பாபு மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஓய்வு பெற வேண்டிய நாளில் தபால்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Tags :

Share via