உத்தரகாண்டில் இளைஞர்கள் போராட்டத்தில் தடியடி

by Staff / 10-02-2023 03:18:45pm
உத்தரகாண்டில் இளைஞர்கள் போராட்டத்தில் தடியடி

உத்தரகாண்ட் மாநில தலைநகரான  டேராடூனில் அரசு வேலை குறித்த  தேர்வுத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாகவும், தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்தும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.உத்தரகாண்ட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய பல்வேறு ஆள்சேர்ப்பு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி  இளைஞர்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தைக் கைவிடுமாறு போலீசார் வற்புறுத்தியதால் இளைஞர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மர்ம நபர்கள் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் போராட்டம் வன்முறையாக மாறியது.போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில் பல  இளைஞர்கள் காயமடைந்தனர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் சாலைகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இளைஞர்களுக்கு எதிரான காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து இன்று மீண்டும் பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து இன்று உத்தரகாண்ட் பெரோஜ்கர் சங் அமைப்பு முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போரட்டத்தில் மீண்டும் கவல்துறைக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து காவல்துறை போராட்டம்  நடத்தியவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர்.

இந்த போராட்டம் தொடர்பாக உத்தரகாண்ட் காவல்துறை 13 பேரை கைது செய்துள்ளது. மேலும் டேராடூன் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் 15 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தரகாண்ட் முதலமைச்சர் பிஎஸ்.தாமி தடியடி, கல்வீச்சு தொடர்பாக மாவட்ட நீதிபதியின் மூலம் விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via