பள்ளி செல்லாக் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாணவர்களின் வீடு தேடிச்செல்லும் கல்வி அலுவலர்கள்:

by Editor / 01-06-2023 09:21:15pm
பள்ளி செல்லாக் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாணவர்களின் வீடு தேடிச்செல்லும் கல்வி அலுவலர்கள்:

தமிழ்நாடு முழுவதும் பள்ளி செல்லாக் குழந்தைகளை வீடு தேடிச் சென்று படிப்பை தொடர பிரச்சாரம் செய்து மீண்டும் பள்ளியில் சேர்க்க கல்வித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டுகளில் ‘கொரோனா’ பரவலின் காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் நேரடியாக சென்று பயில முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்படைந்தது. இந்நிலையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் தான் முழுமையாக வகுப்புகள் நடைபெற்று தேர்வு நடந்து முடிந்தது.

கடந்த கல்வி ஆண்டு துவக்கத்தில் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வகுப்புகள் நேரடியாக நடந்தபோது மாணவர்கள் கற்க சிரமப்படுவது தெரிய வந்தது. இதை அடுத்து இல்லம்தேடிக் கல்வித்திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன. இதற்காக ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டன. இதன் பலனாக மாணவர்களுக்கு  மீண்டும் கற்கும் ஆர்வம் ஏற்பட்டது.

எனினும் கடந்த பொதுத் தேர்விற்கு வருகைப் புரியாதமாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தயக்கம், இடம்பெயர்ந்தது, வேலைக்கு சென்றது போன்ற காரணங்களே  இதற்கு காரணம் என தெரிந்தது. இதையடுத்து மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க புதிய கல்வி ஆண்டில் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பணியாக கடந்த ஆண்டில் சரியாக பள்ளிக்கு வருகை தராத மாணவர்கள், பாதியில் நின்றவர்கள், தேர்வு எழுதாதவர்கள் போன்றவர்கள் விவரங்களை கணக்கெடுத்து அவர்கள் மீண்டும்படிப்பை தொடர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் உத்தரவுப்படி வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில்மாணவர்கள்  குடியிருக்கும் இடங்களுக்கே தேடிச்சென்று மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு கல்வித் துறை சார்பில் தரப்படும் நலத்திட்ட உதவிகள், எதிர்கால பலன்கள் போன்றவைகள்குறித்துவிளக்கப்படுகின்றன. இதன் பலனாக பல மாணவ,மாணவிகள் மீண்டும் பள்ளியில் சேர ஒப்புக்கொண்டு ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர். 


 

 

Tags :

Share via