பிஹார் முன்னாள் எம்.பி.குற்றவாளி - 28 ஆண்டு நடைபெற்று வந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

by Admin / 19-08-2023 12:11:20pm
பிஹார் முன்னாள் எம்.பி.குற்றவாளி - 28 ஆண்டு நடைபெற்று வந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 

28 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இரட்டைக் கொலை வழக்கில் பிஹார் மாநில முன்னாள் எம்.பி. குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிஹார் மாநிலம் சாப்ரா பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர ராய், தரோகா ராய் ஆகியோர் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நடந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.வழக்கில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியை (ஆர்ஜேடி) சேர்ந்த பிரபுநாத் சிங் உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டனர்.

தேர்தலில் தனக்கு வாக்களிக்க மறுத்ததால், அவர்கள் 2 பேரையும் பிரபுநாத் சிங் சுட்டுக் கொன்றதாக வழக்குப் பதிவானது. இந்த வழக்கில் பிரபுநாத் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று சாப்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பாட்னா உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ல் பிரபுநாத் சிங் உள்ளிட்டோர் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர்கள் விடுக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரபுநாத் சிங் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், இரட்டைக் கொலை வழக்கில் பிரபுநாத் சிங்கின் தண்டனை விவரம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கில் பிரபுநாத் சிங் மட்டுமே குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். பிரபுநாத் சிங்கை, வரும் செப்டம்பர் 1-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துமாறு பிஹார் மாநில போலீஸ் டிஜிபி, தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்றொரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார் பிரபுநாத் சிங். 1995-ல் எம்எல்ஏ அசோக் சிங் கொலை வழக்கில் பிரபுநாத் சிங் மற்றும் அவருடைய 2 சகோதரர்களும் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.

28 ஆண்டு காலமாக நடை பெற்று வந்த இரட்டைக் கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via