வழிபாட்டில் தவிர்க்க வேண்டிய மலர்கள்

by Editor / 06-09-2021 10:14:21am
வழிபாட்டில் தவிர்க்க வேண்டிய மலர்கள்

இறைவனுக்கு பிடித்தமான மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும். அவ்வாறு இறைவனை வழிபடுகையில், நாம் அர்ப்பணிக்கும் மலர்களில்கூட சில விதிமுறைகள் உள்ளன. சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை என்றும், சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை அல்ல என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதையடுத்து, அத்தகைய வழிமுறைகளை காலம் காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது என்பதை அறிந்துகொள்வோம்.

தவிர்க்க வேண்டிய மலர்கள்

பொதுவாக விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. ஆனால், சதுர்த்தியில் மட்டும் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு.

விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது.

சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது. ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.

அம்பிகைக்கும், துர்கைக்கும் அருகம்புல்லினால் அர்ச்சிக்கக் கூடாது.

சூரியனுக்கு வில்வத்தால் அர்ச்சிக்கக் கூடாது.

சரஸ்வதிக்கு பவள புஷ்பத்தால் அர்ச்சிக்கக் கூடாது.

பைரவருக்கு மல்லிகையால் அர்ச்சிக்கக் கூடாது.

லட்சுமிக்குத் தும்பைப் பூவினால் அர்ச்சனை செய்யக்கூடாது.

குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக்கூடாது.

சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும்.

பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும். 

 

Tags :

Share via