காதலியுடன் பேசிக்கொண்டே கிணற்றில் விழுந்த இளைஞர்

by Editor / 19-09-2021 05:31:08pm
காதலியுடன் பேசிக்கொண்டே கிணற்றில் விழுந்த இளைஞர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்பவரும் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இவர் நூற்பாலை அருகே உள்ள கிணற்று பகுதியில் நின்றுகொண்டு நேற்று இரவு தனது காதலியுடன் ஜாலியாக செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அங்கு விளக்குகள் இல்லாத காரணத்தாலும் கிணற்றில் சுற்றுச்சுவர் இல்லாததாலும் போன் பேசிக்கொண்டவாறே எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கிறார். உள்ளே விழுந்த பிறகு தன்னைக் காப்பாற்றக் கோரி சத்தம் போட்டிருக்கிறார். ஆனால் இரவு நேரம் என்பதால் ஒருவரும் எட்டிப் பார்க்கவில்லை. நேற்று இரவு முதல் இன்று காலை வரை சுமார் 10 மணி நேரம் கிணற்றுக்குள் தத்தளித்திருந்திருக்கிறார் ஆஷிக்.

இச்சூழலில் இன்று காலை கிணற்றிலிருந்து அலரல் சத்தம் வருவதை கேட்ட அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் ஆஷிக் இருந்ததைப் பார்த்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஆஷிக்கை மீட்டனர். அவரை பரிசோதித்ததில் கிணற்றில் விழுந்ததில் அவரின் கையில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

Tags :

Share via