ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி  சுடுதல்: இந்தியா முதலிடம்

by Editor / 04-10-2021 03:40:04pm
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி  சுடுதல்: இந்தியா முதலிடம்

 

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஒலிம்பிக்ஸ் முடிந்த கையோடு உலக துப்பாக்கி சுடுதல் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்று வருகிறது.


இதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா 3-வது நாளான  10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு, பெண்கள் அணி, ஆண்கள் அணி மற்றும் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் அணி ஆகிய பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது. ஏற்கனவே 2 தங்கம் வென்றிருந்த இந்திய வீராங்கனை மானு பாகெர் அந்த எண்ணிக்கையை 3-ஆக உயர்த்தினார். அதாவது மானு பாகெர், ரிதம் சாங்வான், ஷிகா நார்வால் ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி சுற்றில் 16-12 என்ற புள்ளி கணக்கில் பெலாரசை தோற்கடித்தது.


ஆடவர் அணி பிரிவில் நவீன், சரப்ஜோத் சிங், சிவா நர்வால் ஆகியோர் கூட்டணி முதலிடம் பிடித்தது. பெலாரஸ் வெள்ளியும், அமெரிக்கா வெண்கலமும் வென்றன. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் அணி பிரிவில் இந்தியாவின் பார் மகிஜா, ஸ்ரீகாந்த் தனுஷ், ராஜ்பிரீத் சிங் கூட்டணி தங்கம் வென்றது.


3-வது நாள் முடிவில் இந்தியா 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என்று 14 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 4 தங்கம் உள்பட 10 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

 

Tags :

Share via